திங்கள், 16 ஜூலை, 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)


பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997


ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி :
           ஐந்தாம் வகுப்பு முடிஞ்சிடுச்சு... ஆறாவது சேர்க்கணும். எந்த பள்ளிகூடத்துல சேர்க்கணும்னு ஏற்கனவே வீட்ல முடிவு பண்ணியிருந்தாங்க. ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளி(S.K.V Hr. Sec. School). எங்க சுற்றுவட்டாரதுல தமிழ் வழி கல்விகூடங்களில் சிறந்த பள்ளி இதுதான். தமிழ் வழி என்பதால் அரசு பள்ளி என நினைத்துவிட வேண்டாம். இது தனியார் பள்ளிக்கூடம் ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் அரசாங்கம் வழங்கும். பள்ளிக்கட்டணம் ஆண்டிற்கு ஒருமுறை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ரூ.240 கட்டியதை போல ஞாபகம். எங்க ஊருலேர்ந்து குறுக்கு வழியாக வந்தா 5 கி.மீட்டர்ல பள்ளிகூடத்துக்கு வந்துடலாம். பேருந்து தடத்தின் வழியா வந்தா 7 கி.மீட்டர்.
           ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளியில சேரருதுனா சாதாரண விஷயம் இல்ல.ஏன்னா அப்பவே நீங்க எத்தினாவது வகுப்புல சேருறதா இருந்தாலும் அவங்க ஒரு நுழைவுத் தேர்வு வப்பாங்க அதுல தேர்ச்சி பெறனும்.இடம் கேட்டு வரும் எல்லா பசங்களையும் சேர்த்துக்கொள்ள சொல்லி மனிதசங்கிலி போராட்டம்லாம் நடந்துச்சி.
           அடுத்து நுழைவுத்தேர்வு. நுழைவுத்தேர்வில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக உன் பெயர் என்ன?, உன் அப்பா பெயர் என்ன?, உன்னோட ஊரு எது? என ஒரு 20 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஒருசில மக்கு பசங்க மாதிரி இல்லாம எனக்கு ரொம்ப நல்லாவே தமிழ் எழுத படிக்க தெரியும். அதனால தமிழில் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்குமே பதில் எழுதிட்டன். ஆனால் ஆங்கிலத்தில கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தட்டு தடுமாறி பதில் எழுதினன். 
           எனக்கு ஆங்கில அறிவு அந்த சமயத்தில் ஒன்னும் பெருசா இல்ல. என் பேரு, எங்க அப்பா பேரு, எங்க அம்மா பேரு, எங்க ஊரு பேருலாம்,"My Name is..., My Father Name is..., My Mother Name is..., My Native is..." னு போட்டு எழுதுவன் அவ்ளோதான். "One, Two, Three" மூணு வரைக்கும் பாக்காம எழுதுவன், பத்து வரைக்கும் சொல்லுவன். "A,B,C,D..." முழுசா தெரியும். எனக்கு தெரிஞ்ச ஆங்கிலம் அவ்ளோதான்.
           நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: அந்த பள்ளிகூடத்துல எங்க சொந்தகாரர் ஒருத்தர் ஆசிரியரா பணியாற்றிக்கிட்டிருந்தாரு. அவரு கிட்ட எங்க அப்பா என்னோட தேர்ச்சிக்காக சிபாரிசு செய்ய சொல்லி கேட்டிருந்தார். அவர் தான் தேர்வு முடிவ எங்ககிட்ட சொன்னார். பையன் ஏற்கனவே முதல் வகுப்புல தேர்ச்சி பெற்றுவிட்டான் அவனுக்கெல்லாம் சிபாரிசு தேவை இல்லைங்க என்று எங்க அப்பாகிட்ட அவரு சொன்னாரு.
           நுழைவுத்தேர்வின் தேர்ச்சியை தொடர்ந்து, ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.
இனி...


ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு :(VI-D)
           ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவில் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களின் பட்டியல் பாட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு [VI-D](1997-1998)
பள்ளிக்கூடம் : ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.
வ.எண் பாடம் ஆசிரியர்

1
2
3
4
5
6
7
8
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
ஓவியம்
தறி
உடற்கல்வி (P.E.T)
புலவர்.திரு.தேவராஜ்
திரு.சிவபெருமாள்*
திரு.சிவபெருமாள்
திரு.C.முருகவேல் (C.M)
திரு.வேல்முருகன்
திரு.இரவிச்சந்திரன்
---?---
திரு.வேலாயுதம்
* : வகுப்பாசிரியர், ---?--- : பெயர் நினைவில் இல்லை.


ஆறாம் வகுப்பின் முதல் நாள், எங்களை வேதியியல் ஆய்வக கட்டிடத்தின் மாடியில் உள்ள ஒரு வகுப்பில் உக்கார வச்சு, இனிமே இதுதான் உங்களுக்கான வகுப்புனு சொன்னாங்க. ஒரு ஒரு மாசம் அங்க இருந்திருப்போம்.. ஒரு மாசம் கூட இருக்காது. அதுக்கு அப்புறம், வேதியியல் ஆய்வகத்தோட முன்னாடி இருக்கிற வேப்பமரமும், ஆய்வகத்திற்கு பின்னாடி இருக்குற தறி வகுப்போட முன்னாடி இருக்கிற வேப்பமரமும்தான் ஆறாவது 'ஈ' பிரிவு வகுப்பா இருந்துச்சி. 
இங்க தான் வருகைப் பதிவு அழைப்பின் போது "வணக்கம் அண்ணா" என்று சொல்லிகொண்டிருந்த எனக்கு " Present Sir " என சொல்ல வேண்டும் என கற்றுக்கொடுத்தார்கள்.

மறக்க முடியாத சம்பவங்கள் :


சம்பவம் 1:
ஒரு நாள் எங்கள் வகுப்பாசிரியர் ஆங்கில பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட வரியை படிக்கும்போது, அவ்வரியை அடிக்கோடிட சொன்னார். அதாவது, "நான் இப்ப படிக்கிற வரியை Underline பண்ணுங்க" அப்டின்னு சொன்னார். எனக்கு என்ன சொல்றாருன்னு ஒன்னும் புரியல. அப்பலாம் நம்ம ஆங்கில அறிவுதான் அதிபயங்கரமாச்சே..! பேந்த பேந்த அவர் மூஞ்சியையே பார்த்தன். அடுத்த சில வினாடிகளில் என் முதுகுல மர அளவுகோலால் "சளார்"னு ஒரு அடி. "Underline பண்ண சொன்னா என்னடா பண்ணிகிட்டிருக்க"னு திட்டு வேற. அவசர அவசரமா பக்கத்துல இருந்தவன பார்த்தன். அவன் "U" வை கவுத்திபோட்ட மாதிரி தொடர்ச்சியா ஒரு வரியோட அடியில கோடு போட்டான். ஓ...! "Underline" னா இப்டி அடியில வளைச்சி வளைச்சி கோடு போடறதுபோல அப்டின்னு நெனச்சன். ஆனால் அந்த வகுப்புலேயே "Underline" னா அடிக்கோடிடுதல் அப்டின்னு தெரிஞ்சுகிட்டன்.

சம்பவம் 2:
இது அறிவியல் பாட வேளை, எங்களை அமைதியாக படிக்கும்படி உத்தரவிட்டிருந்தார் அறிவியல் ஆசிரியர் C.முருகவேல். நாமலாம் என்னைக்கி  வகுப்புல படிச்சிருக்கோம். என் பக்கத்துல கதிரவன்-னு ஒரு பையன் உக்காந்திருந்தான். நானும் அவனும் பேசிக்கிட்டிருந்தோம். ஒரு சமயத்துல எத பத்தி பேசிக்கிட்டிருந்தோம்னு தெரியல பேச்சு வாக்குல 1.மோளம் அடிச்சுக்கிட்டு வருவாங்க. 2. பொங்கல், தீபாவளி சமயத்துல காசு கேப்பாங்க. அப்டின்னு ஒரு ரெண்டு விடயத்த சொல்லிட்டன். அந்த பய புள்ள இந்த விடயத்த வாத்தியார் கிட்ட என்னனு சொல்லுச்சி எப்புடி சொல்லிச்சுன்னு தெரியல. அடுத்த ஒரு ரெண்டு நிமிடத்துல என்ன கூப்பிட்டு வச்சி ஒரு அஞ்சு நிமிடம், இந்த அஞ்சு நிமிடத்தில் மூணு நிமிடம் அடினா ரெண்டு நிமிடம் உதை. அஞ்சு நிமிடத்துல எவ்வளவு அடி அடிக்க முடியுமோ அவ்வளவு அடி அடிச்சிட்டாரு. ரெண்டாவது முறையா பயங்கரமாக அடி வாங்குரன். அன்னிலேர்ந்து நான் அந்த பையன்கிட்ட பேசறதே விட்டுடன்.
                                                                                       [1999 ம் ஆண்டு நான் ]
 1999 லையே இப்டி இருக்கறனா..! 1997 ல எப்டி இருந்திருப்பன். ஒரு பாவமும் அறியாத கள்ளங்கபடமற்ற இந்த பிஞ்சு முகத்த பாத்தாதுக்கப்பறமும் அடிச்சாரு. இருந்தாலும் எனக்கு அவரு மேல கோவம் இல்ல. நான் ஏதோ தப்பு பண்ணிட்டதா ஒரு உணர்வு. என் கோவம் அந்த பையன் மேல தான். என்ன இப்படி போட்டுகுடுத்து அடி வாங்கி குடுத்துட்டானேனு.


இதுதவிர வரைபட கையேடு (Graph Note) எடுத்து வராம தறி ஆசிரியரிடம் அடி வாங்கியது, ஓவிய கையேடு (Drawing Note) கொண்டு வராம ஓவிய ஆசிரியரிடம் அடி வாங்கியது என நெறைய இருக்கு. ஆனால் மேற்சொன்ன ரெண்டு சம்பவங்கள்தான் என்னை வெகுவாக பாதித்தது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

எனது ஊர் : கீழூர் - சிங்கநகர் (செவி வழிச் செய்தி)

கி.பி 17-18 ம் நூற்றாண்டின் ஒரு சமயத்தில், தற்ச்சமயம் பாச்சாரப்பாளையம் எனப் பெயர் கொண்டிருக்கும் ஒரு ஊரினை தலைமை இடமாக கொண்டு பாளையக்காரர்கள் வம்சத்தில் வந்த ஒரு அரசர் ஆட்சி புரிந்து புரிந்துகொண்டிருந்தார்.

ஒரு நாள் பாச்சார பாளையத்திலிருந்து வடக்கு திசை நோக்கி தனது வீரர்களுடன் வேட்டைக்காக புறப்பட்டார் அரசர். தாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு 1 கி.மீ தூரத்தை அடைந்த போது, ஒரு காட்டு முயலை கண்ட அரசர் தனது வேட்டை நாயை முயலை பிடித்து வர ஏவினார்.


அந்த சமயத்தில் தான் அந்த ஆச்சரியமும் நிகழ்ந்தது. வேட்டை நாயை சற்றும் எதிர்பாராத அந்த முயல் தப்பி ஓட முயற்ச்சிக்கும் என எதிர்பார்த்த மன்னருக்கும் வீரர்களுக்கும் முகத்தில் கரி பூசினாற்போல் வேட்டை நாயை எதிர்த்து நின்றதாம் அந்த காட்டு முயல். முயலை கவ்வி பிடிக்க போன வேட்டை நாயை விரட்டி அடித்ததாம் அந்த காட்டு முயல்.


இதை சற்றும் எதிர்பாராத மன்னர் ஆச்சரியம் கொண்டு, வேட்டை நாயையே ஒரு காட்டு முயல் விரட்டியடிக்கிறது எனில் இம்மண் எவ்வளவு வீரம்  செறிந்ததாக இருக்க வேண்டும் என கூறி அகமகிழ்ந்து போனாராம்.

வேட்டையை முடித்துக்கொண்டு அரண்மனைக்கு திரும்பிய அரசர், அடுத்த சில தினங்களில் தனது படை பரிவாரங்களுடன் அரண்மனையை முயல் வேட்டைநாயை எதிர்த்த அந்த இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தை "சிங்க நகர்" எனப் பெயரிட்டு அழைத்துவந்தனராம்.

சிங்க நகர் எனப் பெயர் பெற்றிருந்த ஊருக்கு கீழூர் எனப் பெயர் வந்தது எப்படி என்பதைப் பற்றி தெரியவில்லை.


ஆதாரம் : கீழூர் பாளையக்காரர்களின் வம்சத்தில் தற்போது உள்ளவர்களில் இருவரிடமிருந்து மட்டும் தனித்தனியே கேட்டுப் பெறப்பட்ட செய்தி இது. இருவருமே மேற்சொன்ன ஒரே நிகழ்வையே சொல்லினர். மேலும் இது செவி வழி செய்தியாக மட்டுமே இருக்கிறதேயொழிய, கல்வெட்டுக்களோ எழுத்துப்பூர்வமான ஆதாரங்களோ எதுவும் இல்லை.

திங்கள், 9 ஜூலை, 2012

நான் பா.ம.க ஆதரவாளன்.. ஏன்?

           எனக்கு மருத்துவர் இராமதாசை பிடிக்காது. அவரது பெயரை கேட்டாலே ஒரு விதமான வெறுப்பு தோன்றும். ஏன் பிடிக்காது? எதனால வெறுப்பு? னு கேட்டிங்கனா பதில் தெரியாது. நண்பர்களுடன் அரசியல் பேசும்போது தேவையே இல்லாம அவரை திட்டி பேசுவன். ஏன் பேசுவன்னு தெரியாது. ஆனால் அவை எல்லாமுமே தலைகீழாக முற்றிலுமாக மாறியது என் முதுநிலை பட்ட படிப்பின் இறுதியாண்டிற்குப்  பிறகு. எப்படி என்பதை இனி பார்க்கலாம்.
           நான் முதுநிலை தொழிற் சார்ந்த பட்ட படிப்பின் இறுதி ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்ட வேலையை(Project Work) ஓசூரில் உள்ள ஒரு பிரபலமான நிறுவனத்தில் மேற்க்கொண்டேன். அங்குதான் இதுவரையில் இல்லாத ஒரு புதிய பழக்கம் எனக்கு ஏற்ப்பட்டது. தினமும் இணையத்தில் செய்தித்தாள்களைப் படிப்பது.அப்படி எனக்கு பழக்கமான முதல் பத்திரிக்கை "தின மலர்".
           நான் இன்று இராமதாசுவை ஆதரிப்பதற்கு மிக முக்கிய இன்றியமையாத காரணங்களில் தினமலரும் அதன் வாசகர்களும் மிகவும் முக்கியமானவர்கள். அப்போதெல்லாம் தினமலரில் தினமும் மருத்துவர் இராமதாசைப் பற்றி செய்தி வரும். பெரும்பாலான செய்திகள் மறைமுகமாக மருத்துவர் இராமதாசையும் பா.ம.க வையும் குறை சொல்வதாகவே இருக்கும்.
அப்படி வரும் செய்திகளில் விசேடம் என்னவென்றால், மத்த எந்த செய்திக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கருத்துரைகள் இராமதாசு சம்மந்தப்பட்ட செய்திகளில் இருக்கும்.
           அங்கு எழுதப்படும் கருத்துகள் பெரும்பாலும் மருத்துவர் சொல்லியிருக்கும் கருத்தை ஆதரித்தோ எதிர்த்தோ இருக்காது, அவரை கண்ணா பின்னாவென திட்டித்தான் எழுதியிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் அவரை திட்டி எழுதும்போது பயன்படுத்திய வார்த்தை "மரம் வெட்டி".ஆனால் இப்பலாம் யாராவது மரம் வெட்டினு சொன்னா எனக்கு வரும் கோவத்துக்கு அளவே இருக்காது.
           அவர மரம் வெட்டினு சொல்றதுக்கு காரணம், 1987 ல வன்னியர் சங்கத்தால நடத்தப்பட்ட போராட்டத்துல மரங்கள் வெட்டப்பட்டதுதான். 
அந்த சமயத்துல எனக்கு வன்னியர் சங்க போராட்டத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது.
           வன்னியர் சங்க போராட்டத்தைப் பற்றி தெரிஞ்சுக்க "கூகிள்" இணையதளத்துல தேட ஆரம்பிச்சேன். அப்படி நான் தேடியதில் எனக்கு கிடைத்த முதல் இணைப்பு 

1.  திரு.வீர வன்னியன் அவர்களின் வலைப்பூ.
           எனக்கு  மருத்துவர் மீது நல்ல மதிப்பையும், பா.ம.க வின் மீது நல்லதொரு அபிப்பிராயத்தையும் ஏற்ப்படுத்தியது அவரின் பின்வரும் இடுகைகள்:
           1.மறக்கப்பட்ட போராட்டமும், மறைந்துபோன உயிர்களும் - 1
           2.மறைக்கப்பட்ட போராட்டமும், மறைந்துபோன உயிர்களும் - 2
           3.சாதிக் கட்சிகளை விலக்குங்கள்

வன்னியர் சங்க போராட்டத்தைப்பற்றி வீரவன்னியன் அவர்கள் சொல்லியிருக்கிற கருத்துக்கள் எனக்கு போதுமானதாக தோன்றவில்லை. ஆகவே, மீண்டும் வன்னியர் சங்கத்தைப் பற்றி இணையத்தில் தேடலானேன். 

அடுத்ததாக எனக்கு கிடைத்த இரண்டாவது இணைப்பு அண்ணன்

2திரு.குழலி அவர்களின் வலைப்பூ "குழலி பக்கங்கள்".
           அண்ணன் குழலி அவர்களின் பதிவுகளை படிக்க படிக்க மருத்துவர் இராமதாசு மீதும் பா.ம.க மீதும் மதிப்பும் மரியாதையும் உயர்ந்துகொண்டே இருந்தது. ஆனால் வன்னியர் சங்க போராட்டத்தைப்பற்றி, திரு.வீரவன்னியன் அவர்களின் பதிவுகளில் இருந்த கிட்ட தட்ட அதே செய்தி தான் இங்கும் இருந்தது.
நான் படித்த அந்த பதிவுகள் இதோ :
        1.மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1
        2.மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2
        3.மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல்- 3
        4.மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - 4

அண்ணன் குழலியின் பதிவுகள் மருத்துவர் இராமதாசைப் பற்றியும் பா.ம.க வைப் பற்றியும் தெளிவு படுத்தியதே தவிர வன்னியர் சங்க போராட்டத்தைப் பற்றி பெரிதாக நான் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை.

மீண்டும் தேடல் தொடங்கியது, அடுத்து எனக்கு கிடைத்த இணைப்பு அண்ணன்

3. திரு.அருள் அவர்களின் "பசுமை பக்கங்கள்".
           அருள் அண்ணனின் பசுமைப் பக்கங்களிலும் வன்னியர் சங்க போராட்டம் பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் பா.ம.க வைப் பற்றியும் மருத்துவர் இராமதாசைப் பற்றியும் அதிகமாகவே தெரிந்துகொள்ளலாம். மேலும் அனைத்து விவரங்களும் ஆதாரங்களுடன் கிடைக்கும்.

பா.ம.க வின் செயல் திட்டங்கள் : 
           ஒரு நல்ல அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பா.ம.க வின் செயல் திட்டங்கள் நல்ல அடிப்படை.
1. நிழல் நிதிநிலை அறிக்கை
2. புதிய அரசியல் புதிய நம்பிக்கை  

[பா.ம.க வின் நிதிநிலை அறிக்கைக்கான இணைப்பு கிடைக்கவில்லை]
ஓய்வு கிடைத்தால் இந்த இணைப்புகள் அனைத்தையும் படித்து பாருங்கள், பா.ம.க வின் பார்வை எவ்வளவு தெளிவாக இருக்கிறது என அறிய முடியும்.

சுய சிந்தனை:
           1. யாராவது ஒரு ரெண்டு மூணு பேரு ஒரு கட்சிய பத்தி நல்ல மாதிரியா சொன்னா உடனே அவங்களுக்கு ஆதரவுனு சொல்லுடுவியா? 
           2. இல்ல, அந்த கட்சியோட செயல் திட்டங்கள் மட்டுமே போதுமா? ஒரு கட்சிய ஆதரிப்பதற்கு?
அப்டின்னு கேக்கறவங்களுக்கு பதில்: நிச்சயமாக மேற்சொன்ன விடயங்கள் மட்டும் போதாது.
சுய சிந்தனை அப்டின்னு ஒன்னு கண்டிப்பா தேவை. எனது சிந்தனை எனக்கு தெளிவுபடுத்தியது உங்களின் பார்வைக்கு:
       I. நல்ல திட்டம் :
           ஒரு நல்ல கட்சியாக இருப்பதற்கு மக்களுக்கான அவர்களின் திட்டங்கள் சிறப்பாக அமைய வேண்டும்.
இதன் அடிப்படையில் பா.ம.க தான் முதலிடம்.
      II. கட்சியின் கொள்கை சிறப்பு:
           ஒவ்வொரு கட்சியும் தனக்கென சில கொள்கைகளை கொண்டுள்ளது. அந்த கொள்கைகள் மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் படிக்கல்லாக இருக்க வேண்டும்.
           பா.ம.க வின் கொள்கையானது,"பா.ம.க வை விட சிறப்பான கொள்கைகளையுடைய ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருந்தால் நான் பா.ம.க வை கலைத்துவிட்டு அந்த கட்சியில் இணைந்து விடுவேன்" என மருத்துவர் இராமதாசு சொல்லி சவால் விடும் அளவிற்கு பா.ம.க கட்சியின் கொள்கைகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலும் பா.ம.க விற்குதான் முதலிடம்.
     III.போராடும் குணம்:
           மக்கள் நலனை வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளின் சில தவறான முடிவுகளை எதிர்த்து, அதிகாரிகளின் அலட்சியபோக்கை கண்டித்து என பல வகைகளில் நம் நாட்டிற்கு போராட்டம் தேவைப்படுகிறது.
போராடுவதில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே சம நிலையில் இருக்கின்றன. ஆனால் இங்கு பா.ம.க க்கு ஒரு + என்னவென்றால் மது, புகை, போதை ஆகியவற்றிற்கு எதிராக தீவிரமாக போராடும் ஒரே கட்சியாக பா.ம.க இருப்பதுதான்.
      IV. ஆளுமை திறன் :
           மேற்சொன்ன மூன்று விடயங்களை விட மிக முக்கியமானது ஆளுமை திறன். என்னதான் ஒரு கட்சி சிறப்பான திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்தாலும் ஆளுமை திறன் நிறைந்த ஒருவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்காவிடில் அக்கட்சியை ஆதரிப்பது வீண். இந்த நிலையில் பா.ம.க வின் முதல்வர் வேட்பாளராக இருப்பவர் மருத்துவர்.அன்புமணி இராமதாசு.

i) அன்புமணி இராமதாசு ஆளுமை திறன் மிக்கவரா?
    நிச்சயமாக ஆளுமைத் திறன் மிகுந்தவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு.
எப்படி?
உதாரணமாக இரண்டு விடயங்கள்:

  • பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம்.
  • 108 அவசர ஊர்தி திட்டம்.
        a).பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம்:
                 இந்த சட்டம் உலக அளவில் பிரபலமாக பேசப்பட்ட ஒரு திட்டம். இந்த சட்டத்தை கொண்டு வந்ததை விட அதை செயல்படுத்திய விதத்தில்தான் மருத்துவர் அன்புமணி இராமதாசுவின் ஆளுமைத்திறன் நிரூபிக்கப்படுகிறது. நம்ம நாட்டுல இது மாதிரியான ஒரு நல்ல சட்டம் கொண்டுவர்றதே ரொம்ப பெரிய விடயம். இந்த திட்டத்தை செயல்படுத்தியதில்  அன்புமணியின் ஆளுமை பாராட்டப்படவேண்டியதே. அன்புமணியின் ஆளுமையால் தான் அச்சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் அவர் தனது பதவியை துறந்தபின் இறந்துபோய் இருக்கும் அச்சட்டத்தின் இன்றைய நிலைதான்.
b).108 அவசர ஊர்தி திட்டம்:
     இந்தியாவிலுள்ள மிகச்சிறந்த திட்டங்களில் 108 அவசர ஊர்தி திட்டமும் ஒன்று. இத்திட்டம் முதலில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாசின் முயற்ச்சியால் அறிமுகபடுத்தப்பட்டது. மத்த திட்டங்களைப் போல சாதாரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியாது. இத்திட்டத்திற்கான திட்டமிடலில் மூளைச் செலவு மிக அதிகமாகவே தேவைப்பட்டிருக்கும். முதல் கட்டமாகவும் ஒரு சோதனை ஓட்டமுமாகவே முதலில் இந்த 17 மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அன்புமணி தனது பதவியை துறந்தபின் இந்த திட்டம் இரண்டாம் கட்டமாக நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளதா என தெரியவில்லை.[தெரிந்தவர்கள் தெரியபடுத்தவும்]

விஜய் தொலைக்காட்சியில் மருத்துவர்.அன்புமணி இராமதாசு:

இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் இருக்கு  வேற எதாச்சும் ஞாபகம் வந்தா மறுபடியும் சொல்ரன்.

பா.ம.க வை ஆதரிக்க உந்துதலாக இருந்தவை :
  • தினமலர்-ம் அதன் வாசகர்களும் [முதல் நிலை]
  • வீரவன்னியன் [இரண்டாம் நிலை]
  • குழலி பக்கங்கள் [மூன்றாம் நிலை]
  • பசுமைப் பக்கங்கள் [நான்காம் நிலை]
  • சுய சிந்தனை [தன்னிலை]
குறிப்பு :
           நான் மருத்துவர் இராமதாசை ஆதரித்து எழுதியிருப்பதால், நான் அவரை எந்த தவறும் செய்யாத உத்தமர் என்றோ, மக்களுக்காக மட்டுமே வாழ்பவர் என்றோ சொல்வதாக அர்த்தமில்லை. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளுடனும் அதன் தலைவர்களுடனும் ஒப்பிட்டு பார்க்கும் போது பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் இராமதாசும் எத்தனையோ மடங்கு உயர்ந்தவர்களாகவே தெரிகிறார்கள். மேலும் ஒரு முக்கியமான விடயம் எனக்கு மருத்துவர் இராமதாசை அய்யா என அழைக்க பிடிக்காது. நான் ஒன்பதாவது படிக்கும் போது தான் அய்யா என்ற வார்த்தை மருத்துவர் இராமதாசை அழைக்க பயன்படுத்தப்படுவது எனக்கு தெரியும். அந்த நிமிடமே அவரை அய்யா என அழைக்க பிடிக்காமல் போனது. அன்று முதல் அவரை அய்யா என சொல்லி ஒரு முறை கூட நான் நண்பர்களுடனும் சரி வேறு யாருடனும் சரி பேசியதில்லை.
முக்கிய செய்தி : நான் எழுத்துலகத்திற்கும் அரசியலுக்கும் பெரிதாக ஒன்றும் பழக்கமில்லாதவன். நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அன்புடன் என்னை திருத்துமாறு வேண்டிக்கொள்கிறேன். வன் சொற்கள் வேண்டாம்.