திங்கள், 26 நவம்பர், 2012

பதிவர்களை மிரட்டுகிறேன்..!!!???

அனைவருக்கும் வணக்கம்.

என் பதிவுகளை படிக்க வரும் படிப்பாளிகளுக்கும், பதிவர்களுக்கும் ஒரு மிரட்டல் வேண்டுகோள்.

இதுவரைக்கும் மொத்தமா 20 பதிவுகளை நான் இங்க பகிர்ந்திருக்கிறேன்.
இது 21வது பதிவு. ஒவ்வொரு பதிவுக்கும் சராசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 300.

பத்து பேருக்கு ஒருவர் வீதம்-னு பாத்தாலும் ஒவ்வொரு பதிவுக்கும் 30 பின்னூட்டமாவது வந்திருக்கணும். ஆனால் என்னுடைய பதிலுரையையும் சேர்த்தும் கூட 10 பின்னூட்டங்களை கூட தாண்டவில்லை.

அதன் பொருட்டே இந்த பதிவு.


இங்கு பதிவுகளை படித்துவிட்டு கருத்து இடாமல் செல்வோருக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு எற்படுமாறு கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலில் சீட்டு எழுதி கட்டி, சேத்தியாதோப்பு மந்திரவாதியின் மூலம் வைப்பு சூனியம் வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


---------------------
கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவில் :

இந்த கோவில் பண்ருட்டி- வடலூருக்கு இடையிலான சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மக்கள் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற புகழ்மிக்க கோவில் ஆகும்.

இக்கோயில் புகழ் பெற காரணம். "குடியை தடுக்கும் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார்" எனும் கூற்றே ஆகும்.

ஆம், ஒருவர் ஒருமுறை இனி நான் குடிக்கவே மாட்டேன் என இக்கோயிலில் சத்தியம் செய்து சீட்டு எழுதி கட்டிவிட்டு வந்துவிட்டால், அவருக்கு குடிக்கும் எண்ணமே வராதாம். ஒருவேளை அவர் தனது சத்தியத்தை மீறி குடித்துவிட்டால், அவருடைய கை கால்களை இழுத்துவிடுமாம் [அதாவது பக்கவாதம் வந்தவரை போல் ஆகிவிடுவாராம்]. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த கடவுள் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார்.

எங்க சுற்று வட்டாரத்துல, பக்கத்து வீட்டுக்காரன் கூட சண்டை, இல்லனா எவனாவது எதையாவது திருடிட்டான் அப்டினா, கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலுக்கு போயிட்டு சீட்டு எழுதி கட்டிட்டு வந்துடுவாங்க. ஐய்யனார் சம்பந்தப்பட்டவங்கள ஏதாவது ஒரு வழியில தண்டிச்சுடுவார்.

அவ்வளவு சீக்கிரத்துல யாரும் போய் சீட்டு எழுதி கட்ட மாட்டாங்க. ஏன்னா, சீட்டு எழுதி கட்டிட்டா கண்டிப்பா சம்பந்தப்பட்டவங்களுக்கு கேட்டது நடக்கும் என்பது நம்பிக்கை. எப்பொழுது அளவு கடந்த ஆத்திரமும் கோவமும் வருகிறதோ, அப்போதுதான் இந்த சீட்டு எழுதி கட்ற முடிவுக்கே வருவாங்க.

சேத்தியாத்தோப்பு மந்திரவாதி :

இவரப் பத்தின தகவல்கள் எதுவும் இங்க குடுக்கப்பட முடியாது.

-------------------

அட, என்ன எழுதறதுன்னு தெரியலையா..!? ஒரு சிரிப்பு பூச்சி[:-)] இடுங்க. பதிவு ரொம்ப கொடுமையா இருக்கா..!!? ஒரு அழற பூச்சி[:-(] இடுங்க.
ஏதாவது ஒரு வகையில உங்களோட வருகையை பதிவு செய்யணுமா இல்லையா..!!?
எல்லோரும் மனசுல ஒரு விசயத்தை நல்லா ஏத்திக்கோங்க, கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோயில் மற்றும் சேத்தியாத்தோப்பு மந்திரவாதி.

சரி.. இந்த ஆத்திகவாதிகளும், வாயளவுல நாத்திகம் பேசறவங்களும் இனிமே அவங்களோட வருகையை பதிவு செய்வாங்கன்னு நம்பலாம்.

ஆனால், உண்மையாவே நாத்திகனா இருக்கறவங்களுக்குதான் என்ன செய்றதுன்னு தெரியல. எப்படியோ, எதுவா இருந்தாலும் நாத்திகர்கள் கொஞ்சம் நல்லா யோசிச்சு உங்க வருகையை இங்க பதிவு செய்யுங்க..

நான் மறுபடியும் சொல்றன்


இங்கு பதிவுகளை படித்துவிட்டு கருத்து இடாமல் செல்வோருக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு எற்படுமாறு கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலில் சீட்டு எழுதி கட்டி, சேத்தியாதோப்பு மந்திரவாதியின் மூலம் வைப்பு சூனியம் வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


பின்னூட்ட பெட்டிக்கு மேலேயும் இந்த பத்தியை இணைத்துள்ளேன்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோயில் இல்லை. வார்த்தைகள் கடுமையாக தெரியும் பட்சத்தில் மன்னிக்க வேண்டுகிறேன்


நன்றி : கூகிள் [படம்]

வெள்ளி, 23 நவம்பர், 2012

என்னை பயமுறுத்தியது கோவை..!

என்னை கோவை எப்படி பயமுத்துச்சு அப்டின்னு சொல்றதுக்கு முன்னாடி, கோயம்பத்தூர பத்தி கொஞ்சம் சொல்லிடலாம்...

இதுவரை கோயம்பத்தூருக்கு வந்து பழகாதவங்க நல்லா தெரிஞ்சுக்குங்க, நீங்க ஒரு நல்ல விடயத்தை தவற விடுகிறீர்கள்.

தமிழ்நாட்டிலேயே மரியாதை தெரிஞ்ச மாவட்டம்-னா  அது "கொஞ்சும் தமிழ்" பேசும் கோவை மாவட்டம் தான்.

முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட இயல்பாகவே கொஞ்சலாக பேசுவது எவரையும் ஒரு நொடி சிலிர்க்க வைக்கும். இது கோவையின் தனிச் சிறப்பு.

"என்றா தங்கம்", "என்ன தங்கம் வேணும்" னு கேக்கும்போதே மனசுக்குள்ள ஒரு பூரிப்பு வரும்.

வெளி ஊருலேர்ந்து வந்து இங்க தங்கி இருக்கறவங்களுக்கு, அவங்க தன்னோட ஊருல இருந்தா என்ன மாதிரியான உணர்வு இருக்குமோ அந்த உணர்வு இங்க கெடைக்கறதுக்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

ரொம்ப எளிதில் நாம யாருகிட்ட வேணும்னாலும் பழகிடலாம். பழக ஆரம்பித்துவிட்டால் நம் நெருங்கிய உறவினர்கள் போலவே பழகுவார்கள். அன்பை அடுத்தவர்களுக்கு வாரி இறைப்பதில் கோவைக்குதான் முதலிடம்.

அடுத்தவங்ககிட்ட மரியாதையா பேசணும்னு நெனச்சிகிட்டு பேசாம இயல்பாவே மரியாதையோட பேசறத பாக்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாதான் இருக்கும்.

யாருக்காவது மரியாதையா பேசி பழக கத்துக்கனும்னா..!! ஒரு ஒரு வருடம் கோவையில் தங்கி இருங்க போதும்.

என்னடா இது..!! அப்டினா கோயம்பத்தூர்ல மரியாதைகொறைவா யாருமே பேச மாட்டாங்களான்னு கேட்டீங்கனா..!!? உங்களுக்கு ஒரு எளிமையான வழியை சொல்றன்.. யாரையாவது உங்களுக்கு தெரிஞ்ச வழிமுறையில வம்புக்கு இழுத்தீங்கனா போதும்.

தமிழ்நாட்டுல கோவம் வந்துச்சுனா எல்லா தமிழனும் ஒரே மாதிரிதான்..!!

சரி, நம்ம கதைக்கு வருவோம்..!!

ஒரு வாரத்துக்கு முன்னாடி எங்க சித்தப்பா இங்க கோவைக்கு வந்திருந்தார். ஒரு நாள் இரவு ஒரு உணவகத்துக்கு சாப்பிட போனோம்.

எங்க ஊரு பக்கம்லாம் வா,நீ போ ங்கறதே மரியாதையான வார்த்தைதான். உதாரணமா, இங்க வாங்க-னு சொல்றதுக்கு 'இங்க வா' இல்லனா 'இங்க வாயேன்' னு தான் சொல்லுவோம். வயசு வித்தியாசம்லாம் இல்ல எல்லாருக்கும் ஒரே மாதிரிதான்.

எங்க சித்தப்பா அந்த உணவக பணியாளரிடம் பேசிய வார்த்தைகள் தான் என்னை பயமுறுத்தியது. அந்த பணியாளர், என்னய்யா மரியாத இல்லாம பேசுறன்னு சண்டைக்கு வந்துடுவாரோனு உள்ளுக்குள்ள பக்கு பக்கு னு இருந்துச்சு. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல..

குறிப்பு : யாராவது ஏதாவது சொல்லிட்டுப் போங்கப்பா.. கடுப்பா வருது..!! :-)


செவ்வாய், 20 நவம்பர், 2012

பால் தாக்கரே : என்ன கொடும சரவணன் இதெல்லாம்...

என்ன கொடும சரவணன் இதெல்லாம்...

பால் தாக்கரே செத்துபோய்ட்டாரு..
சரி இப்ப அதுக்கென்ன..!?
அவர் செத்ததுக்கு ஒண்ணுமில்ல..

அவர் செத்ததுக்காக ஏன்டா இப்படி பந்த் பண்றீங்கன்னு ஒரு பொண்ணு தெரியாம முகநூல்ல சொல்லிட்டா..

நம்ம மகாராஷ்டிரா காவல்துறை என்ன பன்னுச்சுனா நாங்க தமிழ்நாட்டு காவல்துறையை விட பெரிய ஆளுன்னு காமிக்கறதுக்காக, யாரோ புகார் கொடுத்தாங்கன்னு அந்த பொண்ண கைது பண்ணிட்டாங்க.

இதுல ஒரு பெரிய நகைச்சுவை இருக்கு. அது என்னன்னா, அந்த பொண்ணோட கருத்துக்கு விருப்பம் தெரிவித்த காரணத்திற்க்காக மற்றொருவரையும் கைது செய்துள்ளனர்.

வர வர என்ன சொல்லணும் என்ன சொல்ல கூடாதுனே தெரியல..

எனக்கு வேற ஈவு சாவு தெரியாது... நான் மாட்டும் ஏடா கூடமா எதாவது சொல்லி என்னைக்கு வாங்கி கட்டிக்கப்போறேனு தெரியல.

ஏற்கனவே,

சின்மயி வழக்கு 
கார்த்திக் சிதம்பரம் வழக்கு-னு 

படு பயங்கரமா பிரச்சனைகள் போய்கிட்டு இருக்கு. இதுல புதுசா இது வேற...

என்னமோ கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்-னு ஒன்னு சொன்னாங்க, அதெல்லாம் எனக்கு கனவு மாதிரியே இருக்கு.

***************
[வண்டு முருகன் பாணியில் படிக்கவும்]
நான் மேற்சொன்ன வழக்குகளிலிருந்து நான் தற்சமயம் இருக்கும் வலைப்பதிவர்கள் உலகில் போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவதால், 
நான் மேற்சொன்ன கருத்துகளுக்காக இங்கேயே இப்போதே இந்த பதிவிலேயே மன்னிப்பு கேட்டு நமது காவல்துறையால் பாதுகாப்பான உலகம் என அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு உலகத்தில் இணைகிறேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்காக என்னை பயந்தாங்கோலி என்றோ பச்சோந்தி என்றோ யாரும் எண்ணி விட வேண்டாம். 
இருக்குற இடத்திலிருந்தே, எழுதிய பதிவிலேயே மன்னிப்பு கேட்கும் துணிவும் தைரியமும் இந்த இணைய உலகத்திலேயே என் ஒருவனுக்கு மட்டும்தான் இருக்கிறது என சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

புதன், 7 நவம்பர், 2012

I-T ACT SECTION 66 A- பதிவர்கள் ஒன்று படுவோம்


வலை தளங்களில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க தருமி வலைப்பூவின் முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து இப்பதிவு .

*****************************************************************************************************************************************************************




 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.