வியாழன், 26 டிசம்பர், 2013

காந்தவராயனும் சேந்தவராயனும் - தமிழனின் வீரமும் பாசமும்



இது உண்மையான வரலாற்று கதை நண்பர்களே. நமது வரலாற்றில் சகோதரர்கள் என்றாலே நமக்கு தெரிந்தவர்கள் கட்டபொம்மன் ஊமத்துரை, பெரிய மருது சின்ன மருது, பொன்னர் சங்கர் போன்றவர்கள்தான். ஆனால், இந்த காந்தவராயனும் சேந்தவராயனும் எப்படி மறைந்துபோனார்கள் என்பதுதான் புரியவில்லை. 
காந்தவராயன் சேந்தவராயன் என உச்சரிக்கும்போது சாதாரணமாக உச்சரித்துவிடாதீர்கள். ஒரு மிடுக்குடன், ஒரு இறுமாப்புடன், ஒரு கர்வத்துடன், ஒரு திமிருடம்,  ஒரு செருக்குடன், என் தமிழர்கள் என்ற பெருமையுடன் கம்பீரமாக உச்சரியுங்கள். 

அப்பப்பா.!! எப்பேர்பட்ட ஆளுமை, எப்பேர்பட்ட வீரம், நெஞ்சை உருக்கும் பாசம் என விளங்கிய இவர்களை பலவாறாக போற்றி புகழ்ந்திருக்க வேண்டும். தென்னிந்தியா முழுமையும் ஆட்சி அதிகாரம் செலுத்திய கிருஷ்ணதேவராயனை கதிகலங்க வைத்தவர்கள். கிருஷ்ணதேவராயனுக்கும், காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்களுக்குமிடையேயான சண்டைப்பற்றிய கதையைதான் இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். ஆனால், என்னால் எந்த அளவிற்க்கு விறுவிறுப்பாகவும் சுவையாகவும் எழுதமுடியும் எனத் தெரியவில்லை. இருப்பினும் என் முயற்சியை தொடர்கிறேன்.

முதலில் யார் இந்த காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்கள் என்பதை பார்க்கலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டிற்க்கு கிழக்கில் செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் வல்லத்திலிருந்து கிட்டதட்ட நான்கு மைல்கல் தொலைவில் உள்ளது “திருவடி சூலம்” எனும் ஊர். இவ்வூருக்கு 16ம் நூற்றாண்டில் இருந்த பெயர் “திருவிடைச்சுரம்”. இத்திருவிடைச்சுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்துவந்த குறுநில மன்னர்கள்தான் இந்த காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்கள்.

இச்சகோதரர்களது அரண்மனை அதாவது காந்தவராயன் சேந்தவராயன் கோட்டை எத்தகைய சிறப்பானது என்றால், 1149 அடி நீளமும், கிழக்கிலும் மேற்கிலும் 2000 அடியும் கொண்ட மதில் சுவரும், கோட்டையை சுற்றி கிட்டதட்ட 50 அடி ஆழம்கொண்ட அகழியும் உடைய அரண்மனை. அகழியை அடுத்து கோட்டை மதில்சுவரும் அதனை கடந்து அரண்மனையும் அமைக்கப்பட்டுள்ளது என “கிருஷ்ணதேவராயன் சேந்தவராயன் சண்டை” எனும் நாடக இலக்கியம் தெரிவிக்கிறது. 

இச்சகோதரர்களுக்கும் கிருஷ்ணதேவராயனுக்குமிடையேயான சண்டையைப் பற்றி இந்த நாடக இலக்கியமும் (M.N.காத்தமுத்து, நாடக ஆசிரியர், ‘கிருஷ்ணதேவராயன் சேந்தவராயன் சண்டை’ - 1968), மெக்கன்ஸி என்ற ஆங்கிலேயர் ஒருவருடைய குறிப்பும் ( “மெக்கன்ஸி குறிப்பு” - Mackenzie Manuscripts Vol-II, ‘Thiruvidaicchuram Kottaiyanda Kandavarayan, Sendavarayan’ - 1815) தெறிவிக்கின்றது. இவ்விரு குறிப்புகளும் சில இடங்களில் வேறுபடுகின்றன.

சரி, இனி கதைக்குள் செல்வோம்.

அது 16ம் நூற்றாண்டின் தொடக்க காலம், ஒட்டுமொத்த தமிழகமும் கிருஷ்ணதேவராயரின் ஆளுமையின்கீழ் இருந்தது. கிட்டதட்ட தமிழகத்தின் அனைத்து அரசுகளுமே கிருஷ்ணதேவராயருக்கு கப்பம் கட்டி வந்தனர். அந்தசமயத்தில் “திருவிடைச்சுரம்” எனும் பகுதியை மிகச்சிறப்பாக ஆட்சிசெய்து வந்தனர் வீரத்திற்க்கு புகழ்பெற்ற இரு சகோதரர்கள். பேர்பெற்ற பண்பாளர்களாக, கண்ணியவான்களாக, கொடையாளர்களாக, வீரமிக்கவர்களாக விளங்கினர் அச்சகோதரர்கள். அவர்கள்தான் “காந்தவராயனும் சேந்தவராயனும்”. இவர்களுடைய கொடை வளத்தையும் ஆளுமையையும் பற்றி “திருக்கை வளம்”,”காந்தவராயன் கலம்பகம்”,”சேந்தவராயன் போர்க்கெழுவஞ்சி” போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் சிறப்பானதொரு ஆட்சியமைப்பை கொடுத்துக்கொண்டிருக்கும் அதே நேரம், தொண்டைமான் சக்கரவர்த்தியவர்களால் குறும்பர்களுக்கு பதிலாக அப்பகுதியில் அமர்த்தப்பட்டிருந்த வெள்ளால பிரபுக்கள் காந்தவராயன் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க முற்ப்பட்டதன் விளைவாக காந்தவராயன் சகோதரர்களால் கடுமையான விளைவுகளுக்கு ஆளாகினர்.

வள்ளல் குணமும் தாளார மனமும் கொண்ட காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்கள், கிருஷ்ணதேவராயனுக்கு கப்பம் கட்ட மறுத்தனர்.

இவர்கள் தொடர்ச்சியாக கப்பம் கட்ட மறுத்துவரும் சேதியும் வெள்ளால பிரபுகளுக்கு தொல்லைகொடுத்துவரும் சேதியும் அரசர் கிருஷ்ணதேவராயரை வந்தடைகிறது. காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்கள் கப்பம் கட்ட முடியாது என திட்டவட்டமாக அறிவிக்கின்றனர். 

கடும் கோபமடைந்த கிருஷ்ணதேவராயர் உய்யாள்வார் பாளையக்காரரை அனுப்புகிறார். காந்தவராயன் சேந்தவராயனை வென்று சிறைபிடித்து வருமாறு ஆணையிடுகிறார். திருவிடைசுரத்தை முற்றுகையிடுகிறார் உய்யாள்வார் பாளையக்காரர். கடுமையான போர் கிட்டதட்ட ஆறு மாத காலங்களுக்கு நடக்கிறது. காந்தவராயனை நோக்கி ஒரு அடிகூட முன்னேறமுடியாமல் பின்வாங்குகிறது உய்யாள்வார் படை. காந்தவராயன் சேனையின் உக்கிர தாக்குதலை தாக்குபிடிக்க முடிக்க முடியாமல் சிதறி ஓடுகிறது எதிரியின் படை. உய்யாள்வார் பாளையக்காரர் விஜயநகரம் நோக்கி ஓட ஓட விரட்டப்படுகிறார்.

உய்யாள்வார் பாளையக்காரரின் தோல்வியை அறிந்து கிருஷ்ணதேவ ராயருக்கு கோபம் பீறிடுகிறது. காந்தவராயன், சேந்தவராயனது திமிரை அடக்கி கைது செய்து அழைத்துவர இராமராயர் என்பாரை ஒரு பெரும்படையுடன் அனுப்புகிறார் கிருஷ்ணதேவராயர். 

[இங்கே இராம ராயரைப் பற்றிய ஒரு குறிப்பு அவசியம் என நினைக்கிறேன் நண்பர்களே. இராம ராயரின் முழுப்பெயர் “அலிய ராம ராயர்” என்பதாகும். இவர் கிருஷ்ணதேவராயரின் மூத்த மருமகனார். மேலும் இராம ராயர் ஒரு வெற்றிகரமான போர் தளபதி, சிறந்த நிர்வாகி மற்றும் திறமையான இராஜதந்திரி. கிருஷ்ணதேவராயரின் பல வெற்றிகரமான படையெடுப்புகளுக்கு காரணம் இந்த இராமராயர் என்றால் அது மிகையாகாது.]

அத்தகைய இராமராயர் தலைமையில் ஒரு பாரீய படையானது திருவிடைச்சுரத்தை அடைகிறது. அங்கே முகாமிட்டு கோட்டையை காண்கிறார் இராமராயர். கோட்டையின் வளமையை கண்டு மிரட்சியடைகிறார். அகழியை கடந்து மதிலை தாண்டி கோட்டையை பிடிப்பது சாத்தியமானதாக இராமராயருக்கு தோன்றவில்லை. இருப்பினும் போருக்கு தயாராகிறார். கிருஷ்ணதேவராயரின் போர்படை தளபதியாயிற்றே விடுவாரா என்ன.?!

இங்கே கோட்டையிலிருந்து, காந்தவராயனின் ஆனைக்கிணங்க சேந்தவராயன் தலைமையில் ஒரு படை தயாராகிறது. போர் தொடங்குகிறது. இரு படையினரும் மிகக் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். சேந்தவராயனை வெல்வது அவ்வளவு சாதாரண காரியாமா என்ன.!? பெருத்த பின்னடைவை சந்திக்கிறது இராமராயர் படை. போரில் தோற்று கைது செய்யப்படுகிறார் இராமராயர். 

போரில் வென்று கிருஷ்ணதேவராயனுக்கு சேதி அனுப்புகின்றனர் காந்தவராயனும் சேந்தவராயனும் வார்த்தைகள் ஏதும் எழுதப்படாமல் இராமராயரின் மூலம். ஆம், எப்படியென்றால் இராமராயருக்கு மொட்டை அடித்து, தலைமயிர் மூன்றாக பிரித்து,  கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதைமீது பின்புறமாக அமரச்செய்து கட்டி விரட்டியடிக்கின்றனர் கிருஷ்ணதேவராயனை நோக்கி.
சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை வெல்வது என்ன அவ்வளவு எளிதா..!!? வீர வேங்கைகள் அல்லவா காந்தவராயனும் சேந்தவராயனும். வெற்றிக் கனவு கண்ட கிருஷ்ணதேவராயனுக்கு பேரதிர்ச்சியை அளித்தது இராமராயருக்கு ஏற்பட்ட முடிவு.

எவ்வளவு முயன்றும் அவர்களை வெல்ல முடியாததால் செய்வதறியாது கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தார் கிருஷ்ணதேவராயர். விஜயநகரப் பேரரசின் பொற்காலம் என்றால் அது கிருஷ்ணதேவராயர் காலம்தான். அவர்காலத்தில்தான் மாபெரும் பேரரசாக விளங்கியது விஜய நகரப் பேரரசு. அப்பேர்பட்ட பேரரசை எள்ளி நகையாடினர் நம் காந்தவராயனும் சேந்தவராயனும். 

நேருக்கு நேர் நின்று எமனை எதிர்க்க முடியுமா .?! அதுவும் அவர்களது கோட்டையில். அவர்கள் வீரர்கள், அவர்களை நேரடியாக மோதி வெல்ல முடியாது என்பதை அறிந்து செய்வதறியாது தவித்தார். கணவனின் துயர்போக்க யோசனை ஒன்றை தெரிவித்தார் விஜயநகர பேரரசியாகிய கிருஷ்ணதேவராயரின் மனைவி. மனைவியின் யோசனை பிடித்துப்போக, மாவீரர்களை கொலை செய்ய ஒரு கோழையை போல சூழ்ச்சியில் இறங்கினார் தோல்வியால் துவண்ட கிருஷ்ணதேவராயர்.

தாசிகுல தேவதை, பார்ப்போர் மதி மயங்கும் பேரழகி, அழகென்றாலும் அழகு அப்படியொரு அழகியான விஜய நகரத்து எழிலி “குப்பிச்சியை” அழைத்துவரப் பணித்தார் கிருஷ்ணதேவராயர். வந்த குப்பிச்சியிடம், காந்தவராயன் சேந்தவராயன் ஆகிய இருவரது தலையை கொண்டுவந்தால் இரண்டு இலட்சம் பொன்னும், இருவரில் எவரேனும் ஒருவரது தலையை கொண்டுவந்தால் ஒரு இலட்சம் பொன்னும் தருவதாக ஒப்பந்தம் செய்தார். 

குப்பிச்சிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உய்யாள்வார் பாளையக்காரரையும், வெள்ளால பிரபுக்களையும் பணித்தார் கிருஷ்ணதேவராயர். உய்யாள்வார் பாளையக்காரர் மற்றும் வெள்ளாள பிரபுக்களால் திருவிடைச்சுரம் அடைந்து அரண்மனையினுள் நுழைந்துவிடுகிறாள் குப்பிச்சி.

உள்நுழைந்த குப்பிச்சி தன் வசீகரிக்கும் அழகால் காந்தவராயனை மதி மயங்க செய்துவிடுகிறாள். குப்பிச்சியின் அழகில் மயங்கிய காந்தவராயன் கோட்டையிலிருந்து சற்று தொலைவில் ஒரு குன்றின் மீது அரண்மனைக்கு ஒப்பானதொரு மாளிகையை கட்டி தந்து அவளை அங்கே குடியமர்த்துகிறான். இன்று அவ்விடம் “குப்பிச்சி குன்று” என்று அழைக்கப்படுகிறது.

சரியானதொரு நாள் பார்த்து உணவில் நஞ்சு சேர்த்து காந்தவராயனை உண்ண செய்து கொலை செய்கிறாள் குப்பிச்சி. தான் உண்டது நஞ்சு என அறியாமலேயே இறந்துபோகிறார் காந்தவராயன். யாருக்கும் அஞ்சாத சிங்கமென வாழ்ந்தவன் பெண்ணழகில் மயங்கியதால் பிணமாய் கிடக்கிறான். எதிரி எவராயினும் எகத்தாளத்தோடு வென்றவனை கொன்று போட்டாள் குப்பிச்சி. வந்தவேளை முடிந்ததென தலையறுத்து காணச் சென்றாள் கிருஷ்ணதேவராயனை.

வெட்டப்பட்ட காந்தவராயனின் தலையை கண்ட கிருஷ்ணதேவராயன் மனம் மகிழ்ந்து ஒரு இலட்சம் பொன்னையும் வழங்கியதுமட்டுமல்லாது ஏகப்பட்ட பொருளும் வசதியும் செய்துகொடுத்தான் குப்பிச்சிக்கு.

விஜயநகரம் காந்தவராயன் மரணத்தால் கோலாகலமாயிருக்க, தமையனின் இறப்பை அறிந்து துடிதுடித்துபோகிறார் சேந்தவராயன். தமையன் மீது கொண்ட பாசம் தாளாது வெறி கொண்ட வேங்கையாய் சினம் கொண்ட சிங்கத்தின் சீற்றத்துடன் வஞ்சித்தவளை வஞ்சம் தீர்க்கவும் ஏவியவனை ஏறி மிதித்து சங்கை நெறிக்கவும் கடுங்கோவத்துடன் கட்டற்று ஓடும் காட்டாற்றைப்போல வெறிகொண்டு தேடினான். சிக்கினாள் தாசியவள். 

பிடிபட்ட குப்பிச்சி, அவளது குடும்பத்தினர், உறவினர், அவளது வம்சத்தினர் மற்றும் அப்பகுதியிலுள்ள அத்தனை தாசிகளையும் சிறைபிடித்து அருகிலுள்ள ஏரியில் வைத்து தலையை துண்டித்து அவ்வேரியில் வீசுகிறார் சேந்தவராயன். ஒருவர் விடாது அனைவரது தலையையும் கொய்து ஏரியில் வீசியதால் ஏரி முழுவதும் குருதியால் நிறைந்து காணப்படுகிறது. இன்று அவ்வேரி “புணை ஏரி/பிண ஏரி” என்று அழைக்கப்படுகிறது.

மேலும் வெறி அடங்காமல் கோபம் குறையாமல் கிருஷ்ணதேவராயனை எதிர்த்து போர் புரிந்து இறந்துபோகிறார் சேந்தவராயன்.

குறிப்பு : நாடக இலக்கியமும், மெக்கன்ஸி குறிப்பும் சில இடங்களில் மாறுபடுகிறது. குப்பிச்சியை அமர்த்தியது கிருஷ்ணதேவராயன் என்கிறது நாடக குறிப்பு. உய்யாள்வார் பாளையக்காரரும் வெள்ளால பிரபுக்களும்தான் குப்பிச்சியை ஏற்பாடு செய்தனர் என்கிறது மெக்கன்ஸி குறிப்பு. மேலும் நாடக இலக்கியத்தில் சேந்தவராயன் கிருஷ்ணதேவராயனை வென்று விடுகிறார். மெக்கன்ஸி குறிப்பில் சேந்தவராயன் இறந்துவிடுகிறார். இப்படி சில முரண்பாடுகள் இவ்விரு குறிப்புகளிலும் இருக்கிறது.

நான் இப்பதிவில் பாதியை எழுதிவிட்டபின் திடீரென ஒரு யோசனை தோன்றியது. இவர்கள் பெரும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கிறார்களே, இவர்களைப் பற்றி ஏற்கனவே பலர் சிரப்பாக எழுதியிருப்பார்களே, அவர்களை விட ஓரளவிற்கேனும் சிறப்பாக எழுதினால்தானே கொஞ்சமாவது நல்லாயிருக்கும் என ‘கூகிளில்’ காந்தவராயன் சேந்தவராயனைப் பற்றி தேடினேன். மிஞ்சியது பெரிய ஏமாற்றம், வருத்தம். 

விக்கிப்பீடியாவில் கூட காந்தவராயன் சேந்தவராயனைப் பற்றி ஏதும் இல்லை.

இவர்களைப்பற்றி ஏன் எவரும் எழுதவில்லை என தெரியவில்லை. அந்நியர்கள் தாய்மண்னை ஆள்வதை விரும்பாத வீரத்திற்க்கு விளக்கமாக இருந்தவர்களைப் பற்றி ஏன் எவரும் எழுதவில்லை. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு நான் இங்கு எழுதியிருக்கிறேன். இணையத்தில் எனக்கு கிடைத்த நிரலிகளை இங்கு தருகிறேன் காணுங்கள்.

 இவ்விணைப்பில் வெகு அழகாக இனிமையாக சொற்சுவையுடன் எழுதியிருக்கிறார்.

இவ்விணைப்புகளில் காணொளிகள் மட்டும்தான் இருக்கும். அவசியம் காணுங்கள். உய்யாள்வாரையும், இராமராயரையும் எப்படி வெற்றிகொண்டார்கள் என திரு.ஆறு அண்ணல் அவர்கள் கள ஆய்வு செய்து தெளிவாக விளக்கியிருக்கிறார். 

நன்றி :
                       1.        மேனாள் தமிழ் நாடு தொல்லியல் துறை இயக்குனர், தொல்லியல் நிபுனர் திரு. நடன.காசினாதன், ‘வன்னியர்’ (வரலாற்று ஆவண நூல்) [இரண்டாம் பதிப்பு- டிசம்பர் 2007]
                       2.        விக்கிப்பீடியா [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D ]
          3.   படம் : வன்னியர் தளம்
3.         


புதன், 20 நவம்பர், 2013

பெயர் தெரியா மரமும் புதையலும் -- தீபம் - மோலாண்டிக்குப்பம்(அழகப்ப சமுத்திரம்)


வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கார்த்திகை தீபத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதலாமென்றிருந்தேன், கால சூழல் எழுத முடியாமல் போயிற்று. இருப்பினும் இந்த தீபத் திருநாளையொட்டி நடந்த ஒரு வரலாற்று நிகழ்வை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். இந்தப் பதிவை அதிக தகவல்களுடன் எழுதலாமென நினைத்திருந்தேன் அதுவும் முடியாமல் போயிற்று.

சரி, இனி பதிவிற்க்கு போகலாம்.

திருவண்ணாமலை தீபம் – மோலாண்டிகுப்பம் (அழகப்ப சமுத்திரம்)

மோலாண்டிக்குப்பம் எனும் அழகப்ப சமுத்திரம் எங்கள் ஊருக்கு(கீழூர்) அருகிலுள்ள மற்றொரு கிராமம். பல ஆண்டுகளுக்கு முன்பு அவ்வூரிலிருந்த ஒரு குடும்பத்தார் அண்ணாமலையார் தீபம் காண திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். அவ்வீட்டில் கர்ப்பிணி ஒருவர் இருந்தார். அவரை அழைத்து செல்ல முடியாது என்பதால் அவரை வீட்டிலிலேயே விட்டுவிட்டு புறப்பட தயாராயினர். ஆனால் அவருக்கோ தீபம் காண அளவில்லாத ஆசை.

வீட்டார் அனைவரும் தீபம் காண திருவண்ணாமலைக்கு புறப்பட்டுவிட்டனர். வீட்டிலிருந்த அப்பெண்மணிக்கு ஒரு யோசனை வந்தது எப்படியாவது தான் தீபத்தை கண்டேயாவது என முடிவெடுத்தார். அதற்காக ஒரு குன்றினை ஏற்படுத்தி அதன் மீது நின்று தீபத்தை காண்பதென முடிவெடுத்து அதன்படி ஆட்களை அமர்த்தி குன்றினை அமைக்கலானார்.

தீபமேற்றும் நாளுக்கு முன்னதாக குன்று அமைக்கப்பட வேண்டுமென்று வேலை படு வேகமாக நடந்தது. நினைத்தபடியே வேலையும் முடிந்தது. அக்குன்றின் மீது ஏறி நின்று அவர் தீபத்தை கண்டு களித்து அண்ணாமலையாரின் அருள் பெற்றார்.

குன்று அமைப்பதற்க்காக வெட்டப்பட்ட இடம் இன்று ஒரு குளமாக காட்சியளிக்கிறது. நான் அவ்வூருக்கு செல்லமுடியாத காரணத்தால் மேலதிக தகவல்களை பெற முடியவில்லை என்பது சற்று வருத்தமாகவே இருக்கிறது.

பெயர் தெரியா மரமும் 7 உரிகளும் :

அதே ஊரில் இருப்பதுதான் இந்த பெயர் தெரியா மரம். இம்மரத்தின் அடிவாரத்தில் ஒரு சிறு கோவில் உள்ளது. எங்க பெரிய ஆயா(எங்க ஆயாவிற்க்கு அக்கா) எப்பவுமே அந்த கோயிலிலேயேதான் இருப்பாங்களாம். மிகவும் தைரியசாலி. எந்நேரமானாலும் எங்க ஊருக்கு முந்திரி காடுகளின் வழியே நடந்தே வந்துவிடுவார். ஒரு முறைகூட இவரை “முனி” சுத்தலில் விட்டதில்லை. சுருக்கு பையில் எப்போதும் விபூதி இருக்கும். சிறந்த இறை நேசர். எனக்கு அவங்கள ரொம்ப புடிக்கும். அவர் இறந்த்தை கூட அவர்கள் அண்ணன் தம்பி சண்டையால் எங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிட்டனர். அவர் எனக்கு சொன்னதுதான் இந்த பெயர் தெரியா மரத்தின் கதை.

அது ஒரு பெரிய மரம். அம்மரத்தின் காய்கள் முருங்கைக்காயை போல இருக்குமாம். எத்தனையோ வெளி நாட்டு அறிஞர்களெல்லாம் வந்து பார்த்தும் அம்மரத்தின் பெயரை சொல்ல முடியவில்லையாம்.

அம்மரத்தில் ஏழு உரிகள் இருக்கிறதாம் அம்மரத்தின் பெயரை சொன்னவுடன் அவைகள் கண்களுக்கு புலனாகுமாம். எவர் ஒருவர் அம்மரத்தின் பெயரை சரியாக கூறுகின்றாரோ அவருக்கே அம்மரத்தில் இருக்கும் புதையல்(உரிகள்) சொந்தமாகும் என்பதுதான் அங்கு நிலவி வரும் கூற்று. இதுவரை எவரும் அம்மரத்தின் பெயரை சொன்னதாக எனக்கு எந்த தகவலும் இல்லை.

குறிப்பு : இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் தகவல்களைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால் அல்லது நான் ஏதேனும் தவறான தகவலை தெரிவித்திருந்தால் அன்புகூர்ந்து தெரியபடுத்தவும்.


புதன், 25 செப்டம்பர், 2013

மக்கள் ஊடகமாக அறியப்படும் இணைய உலகத்திலும் ஏன் இந்த ஓரவஞ்சனை..!!?

பதிவர்களே இது ஒன்றும் அவ்வளவு முக்கிய செய்தி இல்லையா..!!??

இலங்கையில் பல ஆண்டுகளுக்கு பின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து முடிந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இது இலங்கையின் கொடுங்கோலனுக்கு நெருக்கடி தரும் சேதி.

இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற ஒரு தமிழ் அரசியல்வாதி நம் தாயகத்திலிருந்து சென்று தனது அமைப்பின் சார்பாக கொடுங்கோலனுக்கு எதிராக குற்றசாட்டுகளை வைத்து பன்னாட்டு விசாரனையை கோரியிருக்கிறார். 



இலங்கை தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள இந்த சூழ்நிலையில் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை கோரியிருப்பது, குற்றம் சாட்டியிருப்பது அவ்வளவு முக்கியமான செய்தியாக உங்களுக்கு தெரியவில்லையா..!!? 

ஒருவேளை அந்த அரசியல்வாதி அன்புமணி என்பதால்தான் நீங்கள் எழுத மறுக்கிறீர்களா..!!?

தமிழ் தேசியம் பேசும் கட்சியினரும், பொதுப்படைவாதிகளும் எங்கேயய்யா போனீங்க..!!? 

பா.ம.க வை பாராட்ட நேரிடுகிறதே என்பதால்தான் மௌனம் காக்கின்றீர்களா..!!?

தமிழகத்தில் உண்மையான ஊடகங்கள் செத்து போய் பல வருடங்கள் ஆகின்றன.

ஐ.நா சபையில் தமிழர் நலனுக்காக ஒரு நிகழ்வு நடக்கும்போது திரைத்துறையின் 100 ஆண்டு கொண்டாட்டம்தான் முக்கியம் என தலைப்பு செய்தியாக வாசிக்கும் ஊடகங்களை சாடியிருக்க வேண்டாமா நீங்கள்..!!?

மக்கள் ஊடகமாக அறியப்படும் இணைய உலகத்திலும் ஏன் இந்த ஓரவஞ்சனை..!!? 

அது சரி நீங்களேதான் இந்நிகழ்வை கண்டுகொள்ளவில்லை. இதில் எங்கிருந்து நீங்கள் மற்ற ஊடகங்களை சாடுவது. 

எப்படியோ வாழ்த்துக்கள் வலைப்பூ/இணைய/எழுத்து/ஊடக போராளிகளே..!! வெல்க உங்கள் பயணம்..!

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

"மூத்த குடி" மாத இதழில் எனது பதிவு.

இது கொஞ்சம் தாமதமான பதிவு. ஒரு பதிவு எழுதறதுக்கே நமக்கு போதும் போதும்னு ஆகுதுப்பா.. இதுல எப்படிதான் ஒரு நாளைக்கு 10,15னு எழுதறாங்களோ தெரியல.. இந்த பதிவு ஒன்னுமில்லைங்க.. போன மாசம்(ஆடி-August) என்னோட பதிவு ஒன்னு "மூத்த குடி" மாத இதழ்-ல வெளியாச்சு. அந்த நல்ல சேதியை உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சா அதுக்கு இவ்ளோ நாள் ஆகிடிச்சு.. 

வெறும் புகைப்படம் மட்டும்தான் போடனுமா..!!? நாலு வார்த்தை எழுதி போடலாம்னு நெனச்சேன்.. இப்போதைக்கு எதுவும் எழுத தோணல..

எனக்குள்ளேயும் ஒருத்தன் ஒளிஞ்சிகிட்டு இருக்கான்யா..!! இவ்ளோ நாள் தெரியாம போயிடிச்சு..!!

என்னுடைய பதிவை வெளியிட்டு எனக்கு பெருமை சேர்த்த மூத்த குடி பத்திரிக்கை ஆசிரியருக்கு என் நன்றி.





பதிவர் உலக நண்பர்களே நல்லா தெரிஞ்சிக்கோங்க.. என்னோட பதிவும் பத்திரிக்கையில வந்துடிச்சு.. நானும் பெரிய ஆளுதான் நல்லா பாத்துக்கோங்க நானும் பெரிய ஆளுதான்... 
குறிப்பு : யோவ் பிரபல பதிவர் எதாவது ஒரு கருத்த சொல்லிட்டு போயா.. இப்பதான் ஓரளவுக்கு பெரிய ஆளா, பிரபலமா 'form' ஆகியிருக்கேன். இப்ப மட்டும் நீ கருத்திடலனு வச்சிக்கோ ஒரு பயலும் நம்பமாட்டான்... :-)

வியாழன், 5 செப்டம்பர், 2013

நான் விரும்பும் நாலு பேரு - ஆசிரியர்கள்

இந்நன்நாளில் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு எனது ஆசிரியர்களை நினைவுகூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தலைப்பில் மட்டும்தான் நான்கு பேரு. உண்மையில் எனக்கு பிடித்த திறமைவாய்ந்த என்னுடைய ஐந்து ஆசிரியர்களைப்பற்றி சொல்லப்போகிறேன்.
என்னோட 18 வருட பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் என்னை மிகவும் கவர்ந்த எனக்கு பிடித்த ஆசிரியர்கள் இவர்கள். இவர்கள் அனைவருமே மிகவும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள்.

இப்பதிவு என்னுடன் பயின்ற பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை தவிர்த்து ஏனையோருக்கு அலுப்பு தட்டலாம். இனி தொடர்வது உங்கள் விருப்பம்.

        1.       திரு.கோவிந்தசாமி, [1,2ம் வகுப்பு]
எங்களுக்கு தமிழ், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றின் அரிச்சுவட்டை கற்றுகொடுத்தவர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,கீழூர்-ல் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு ஆசிரியர். இவரை ஒன்னாவது வாத்தியார்னு சொல்லுவோம்.

சுவற்றில் ஓவிய தூரிகைகளை வைத்து அழகாக எழுதக்கூடியவர். எங்க ஊரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு முறை எழுதும்போது பார்த்திருக்கிறேன். அப்போதே சற்று வயதானவராக இருப்பார். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை 2000 வரை 1,2 எழுத சொல்லியிருந்தார். 1200 வரை எழுதிவிட்டு சற்று நுணுக்கி எழுதி எழுதுவதை குறைத்து 2000 வரை காண்பித்துவிடலாம் என நினைத்தேன். அருகிலிருந்தவன் மாட்டிவிட்டுவிடுவேன் என மிரட்டியதால் முழுவதுமாக எழுதி முடித்தேன். படிக்கும்போது கண் கண்ணாடி அணிந்துதான் படிப்பார்.

இவருக்கு சொந்த ஊர் அருகில் இருக்கும் பாச்சாரபாளையம். அங்கிருந்து தினமும் மிதிவண்டியில்தான் வருவார். அவரை எப்போது எங்கே பார்த்தாலும் வணக்கம் சொல்லுவது என்னுடைய வழக்கம். நிச்சயமாக அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை, இருப்பினும் பார்க்குமிடங்களிலெல்லாம் வணக்கம் செலுத்த தவறியதில்லை. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக அந்த வழக்கம் என்னிடம் இல்லாமல் போய்விட்டது.

        2.       திரு.சம்பத் குமார். [9,10ம் வகுப்பு]
எங்கள் பள்ளியின் [ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி] திறமை வாய்ந்த மிகச்சிறந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர். எவ்வளவு பெரிய சேதியானாலும் மிக எளிமையாக கையாளுபவர். இவர் எங்களுக்கு பள்ளியில் வகுப்பெடுத்தது இல்லை. நான் இவரிடம் கணிதத்திற்க்கும் ஆங்கிலத்திற்க்கும் தனிப்படிப்பு(Tuition) பயின்றேன்.

எங்க தனிப்படிப்பு நிலையத்தில் 15 பசங்க, 75 பொண்ணுங்க-னு நூறு பேரு படிச்சோம். எங்க தனிப்படிப்பு நிலையத்தின் சுற்றுசூழலும், சூழ்நிலையியலும் எனக்கு ரொம்ப புடிக்கும். அதுவும் விடுமுறை நாட்களில் எனக்கு ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்.

இவருடைய ஊரு குறிஞ்சிப்பாடி. பள்ளிக்கு எப்போதும் தன்னுடைய பழைய மிதிவண்டியில்தான் வருவார். சில சமயங்களில் நடந்து வருவார். தனிப்படிப்பு நிலையம்: வீட்டிற்க்கு எதிர்த்தமாதிரி கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். வீட்டுல தெலுங்குதான் பேசுவாங்க. முழுகை சட்டைதான் போடுவாரு ஆனால், கை பொத்தானை பூட்டாமல் அவிழ்த்துவிட்டிருப்பார். SKV பள்ளியை விட்டு வெளியே வந்தபின்னர் ஒரே ஒரு முறை மட்டுமே அவரை சந்தித்திருக்கிறேன். இப்பொழுது பார்த்தால் அவருக்கு என்னை அடையாளம் தெரியுமா என்பது சந்தேகமே. நாங்கள் வெளிவந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் பணி ஓய்வு அடைந்துவிட்டார் என கேள்விப்பட்டேன்.

        3.       திரு.ரெங்கா ரெட்டி [9,10ம் வகுப்பு]
மிகவும் பொறுமைசாலி. வயதானவர். திறமைமிக்க, சிறப்பு வாய்ந்த ஆசிரியர். எங்களுக்கு 9 மற்றும் 10 வகுப்புகளில் வகுப்பாசிரியர். இவர் எங்களுக்கு நடத்தியது ஆங்கிலம் மற்றும் கணிதம். [ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி].

9 மற்றும் 10ம் வகுப்புகளில் உண்மையிலேயே எல்லா நிகழ்வுகளிலேயும் நான் பாக்கியசாலிதாங்க. படிப்ப பத்தி மட்டும் சொல்றன். எல்லோருக்கும் கடினமான பாடமாக அமைவது  கணிதமும் ஆங்கிலமும்தான். இவ்விரண்டு பாடங்களையும் இரு வேறு சிறப்பான ஆசிரியர்களிடம் பயின்றதால் சந்தேகம் கேட்கின்ற வாய்ப்புகூட குறைந்தது. மங்கிய மாணவனையும் பிரகாசிக்க செய்யும் வல்லமை பொருந்திய ஆசிரியர்கள். எங்க ரெங்கா ரெட்டி ஆசிரியருக்கு என் மீது ஒரு வருத்தம் உண்டு. நான் அவருடைய தனிப்படிப்பு நிலையத்தில் இணையாமல் சம்பத்குமார் அவர்களுடைய தனிப்படிப்பு நிலையத்தில் இணைந்ததுதான் காரணம். அவர் என்னிடம் ஏன் அங்கு இணைந்தாய் என என்னிடம் வினவிய போது பதில் சொல்ல தெரியாமல் என் அண்ணன் சொல்லிதான் இணைந்ததாக சொல்லி தப்பித்தேன்.

இவருக்கு சொந்த ஊரு (வடலூர்/நெய்வேலி) எதுனு மறந்துபோச்சு. எப்பவும் சஃபாரி சட்டைதான் அணிவார். ஒரு பழைய Kinetic Honda Scooter-லதான் வருவாரு. நான் வெளிவந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்றுவிட்டார் என நினைக்கிறேன். பள்ளியில் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார். இப்போது என்னை அடையாளம் கண்டுகொள்வாரா என்றால், அது கேள்விக்குறிதான்.

        4.       திரு.செல்வராஜ் [11,12 ம் வகுப்பு - இயற்பியல்]
அரசு மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி-ல் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு இயற்பியல் ஆசிரியர். எதார்த்தமான ஆசிரியர். சற்றே எரிச்சலுடன் கோவப்படும் சுபாவம். மாணவர்கட்கு எப்படி பாடம்(இயற்பியல்) நடத்தினால் எளிதில் விளங்கிக்கொள்வர் என்பதை நங்கு அறிந்தவர். பாடம் நடத்தும்போது எதார்த்தத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் காரணிகளோடு ஒப்பிட்டு பாடம் நடத்துவார்.

இப்பள்ளியில் எனக்கு ரொம்ப பிடித்த ஒரே ஆசிரியர். மேலும் என்னை புரிந்துகொண்ட ஒரே ஆசிரியர். நான் படித்த அந்த இரண்டு ஆண்டுகளில் என்னை மொத்தமா இரண்டு/மூன்று முறைதான் திட்டியிருக்கிறார். இயற்பியல் பாடத்தின் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியவர்.

இவரோட வீடும் குறிஞ்சிப்பாடியிலதான் இருக்கு. ஒரு மிதிவண்டி வச்சிருக்காரு. அதுலதான் வருவாரு. நான் படிக்கும்போது அவருக்கு ஒரு 35 வயசுக்குள்ளதான் இருக்கும்னு நெனைக்கிறேன். தன்னோட கடமையில் எந்த குறையும் வைக்காத ஒரு நல்ல ஆசிரியர். இவரை கடைசியாக பார்த்தது அப்பள்ளியில் மாற்று சான்றிதழ் வாங்கும்போதுதான்.

        5.       திரு.S.ஞானசேகரன் [SG] – [இளநிலை கணிதவியல்]
பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-ன் கணிதவியல் துறை விரிவுரையாளர்(2004-07). சிறப்பான ஆசிரியர். ஒரே ஒரு முறை இவருடைய வகுப்பில் இருந்தாலே போதும் இவர் எந்த அளவிற்க்கு திறமையான ஆசிரியர் என தெரிந்துகொள்ளலாம். இவர் கோவப்பட்டு திட்டினால்கூட அது திட்டுவதைப் போல இருக்காது. நல்லதொரு அறிவுரையாகத்தான் இருக்கும். இவர் எங்களுக்கு எடுத்த பாடம் இயற்கணிதம்(Algebra).

இவர் மீது கிட்டதட்ட எல்லா மாணவர்களுக்கும் நல்ல மரியாதை இருக்கும். பொதுவாக இவருடைய வகுப்பை மாணவர்கள் புறக்கணிப்பது மிக மிக குறைவு. வகுப்பு நேரங்களில் வகுப்பிற்கு வெளியே இவரை கண்டாலே அவ்விடத்திலிருந்து கணிதவியல் துறை மாணவர்கள் மறைந்துவிடுவர் மரியாதையினால்.

இவருடைய ஊரு கடலூர். “மாருதி-800” மகிழுந்துவுல வருவாருனு நெனைக்கிறேன். படிக்கும்போதே அவருக்கு என்னை தெரிஞ்சிருக்காது இப்பவா தெரியபோகுது. இத்தனைக்கும் நடு வரிசையில் முதல் வரியில் முதல் ஆளாக அமர்ந்திருப்பேன். எல்லா ஆசிரியரும் என் அருகில்தான் வந்து நிப்பாங்க. நான் தூங்கும்போதுகூட யாரும் என்னை கவனிக்க மாட்டாங்க.

1 முதல் 12ம் வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களின் பட்டியல்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழூர் [1 மற்றும் 2ம் வகுப்பு]
தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,சூழ்னிலை அறிவியல்
திரு.கோவிந்தசாமி
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழூர் [3,4 மற்றும் 5ம் வகுப்பு]
தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,சூழ்னிலை அறிவியல்
திரு.சுந்தரமூர்த்தி
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [6ம் வகுப்பு]
தமிழ்
திரு.தேவராஜ்
ஆங்கிலம்
திரு.சிவபெருமாள் (*)
கணிதம்
திரு.சிவபெருமாள் (*)
அறிவியல்
திரு.C.முருகவேல் [CM]
சமூக அறிவியல்
திரு.வேல்முருகன்
உடற்கல்வி
திரு.வேலாயுதம்
தறி
***********************
ஓவியம்
திரு.இரவிச்சந்திரன்
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [7ம் வகுப்பு]
தமிழ்
திரு.தேவராஜ்
ஆங்கிலம்
திரு.T.இராமசாமி [TR] (*)
கணிதம்
திரு.T.இராமசாமி [TR]   (*)
அறிவியல்
திரு.C.முருகவேல்
சமூக அறிவியல்
திரு.இரமேஷ்
உடற்கல்வி
திரு.வேலாயுதம்
தறி
***********************
ஓவியம்
திரு.இரவிச்சந்திரன்
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [8ம் வகுப்பு]
தமிழ்
புலவர் திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம்
திரு.K.கார்த்திகேயன் [KK] (*)
கணிதம்
திரு.K.கார்த்திகேயன் [KK] (*)
அறிவியல்
திரு.தேவனாதன்
சமூக அறிவியல்
திருமதி.ஜனாபாய்
உடற்கல்வி
திரு.செல்வம்
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [9ம் வகுப்பு]
தமிழ்
புலவர் திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம்
திரு.ரெங்கா ரெட்டி (*)
கணிதம்
திரு.ரெங்கா ரெட்டி (*)
அறிவியல்
திருமதி.மாலா
சமூக அறிவியல்
திரு.ஆழ்வார்
உடற்கல்வி
திரு.செல்வம்
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [10ம் வகுப்பு]
தமிழ்
புலவர் திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம்
திரு.ரெங்கா ரெட்டி (*)
கணிதம்
திரு.ரெங்கா ரெட்டி (*)
அறிவியல்
திரு.நவ ஜோதி
சமூக அறிவியல்
திரு.ஆழ்வார்
உடற்கல்வி
திரு.செல்வம்
அரசு மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [11 மற்றும் 12ம் வகுப்பு]
தமிழ்
திரு.தர்மராஜ்
ஆங்கிலம்
திரு.குணசேகரன்
கணிதவியல்
திரு.U.தெய்வசிகாமணி [UD]
இயற்பியல்
திரு.செல்வராஜ் (*)
வேதியியல்
திரு.T.தமிழ்ச்செல்வன் [TT]
உயிரியல்-தாவரவியல்
திரு.மணிவண்ணன்
உயிரியல்-விலங்கியல்
திரு.தனசேகரன்
(*) - வகுப்பாசிரியர்

குறிப்பு : இப்பதிவில் என்னுடைய இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. அவர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.