புதன், 27 பிப்ரவரி, 2013

அரசியல் : பயமாயிருக்கிறது..!

உண்மையாவே பயமாதாங்க இருக்கு..!?


சமீபத்திய சம்பவம் : எங்கள் பக்கத்து கிராமமான வடகுத்து கிராமத்தை சேர்ந்த, வடகுத்து ஊராட்சி மன்ற தலைவரும், பா.ம.க வின் கடலூர் மாவட்ட செயலாளருமான கோ.ஜெகன் அவர்கள் ஒரு மர்ம கும்பலால் வீச்சரிவாள் போன்ற கொடூரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

ஜெகன் அண்ணனைப் பத்தி சொல்லனும்னா, ரொம்ப நல்ல மனுசங்க. அடாவடிக்கு, வீண் வம்பு, தும்புக்கு போனதா நான் கேள்விப்பட்டதே இல்ல. அவரப் போய் இந்த கூலிக்கு கொல பண்ற நாயிங்க தாக்கியிருக்குங்க.
இச்சம்பவத்திற்க்கு அண்ணன் வேல்முருகன் மீது குற்றசாட்டு பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் செய்திதாள்களில் வெளியாகியுள்ளன.
வேல்முருகன் மீது குற்றம் சுமத்தப்படுவதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி, வளர்ச்சியில் பொறாமை. இப்போது நெய்வேலி தொகுதியில் அரசியலில் வளர்ச்சியடைந்து வருபவர்களில் ஜெகன் அண்ணனின் பெயர் முக்கியமானது. இவருக்கு செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. இது நிச்சயமாக அண்ணன் வேல்முருகனை பாதிக்கக்கூடிய செய்திதான்.

ஒரு வம்புக்கும் போகதவரையே இப்படி வெட்ட வந்தானுங்கனா..!! நல்லவவங்கெல்லாம் எப்படி அரசியலுக்கு வருவாங்க. அரசியல்னு சொன்னாலே பயமாதான இருக்கும்..!!?
இதைச் செய்ய ஏவியவன் எவனாயிருந்தாலும் நிச்சயமாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
அண்ணன் ஜெகன் அவர்கள் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறேன்.
நன்றி :Pattali Makkal Katchi (PMK) Internet Wing  [படம்]

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

தமிழன்னா இளிச்சவாயனுங்க - தமிழ் நாடு - இந்தியா



“ மண்ணெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண
தமிழ் நாட்டுல வெவசாயம் செத்தா எனக்கென்ன “

இந்த புதுமொழியை அப்படியே கடைபிடிக்கின்றன தமிழக மற்றும் இந்திய அரசாங்கங்கள்.

“ பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும் ”

இந்த பழமொழி ரொம்ப கச்சிதமாக பொருந்துகிறது நம் தமிழ்நாட்டிற்கு.

ஏற்கனவே மழை பொய்த்து, ஆறுகள் வற்றி, பயிர் வாடி, உயிர் பிரிந்து நிற்கும் தமிழக விவசாயிகளின் மிச்ச மீதியையும் பறித்துக்கொள்ள திட்டம் தீட்டி செயல்படுகின்றன ஆளும் அரசுகள்.

கடலில் நீரில் விவசாயம் செய்யும் தமிழ் மீனவனை அழிக்க சிங்களவனை நியமித்திருப்பதைபோல, நிலத்தில் விவசாயம் செய்பவனையும் அழிக்க திட்டம் தீட்டி சிறுக சிறுக அழிக்கிறார்கள்.

தமிழன்னா இளிச்சவாயனுங்கனு எல்லாருடைய நெத்தியிலேயும் எழுதி ஒட்டியிருக்கா என்ன..!!?

எரிச்சல கெளப்புரானுங்கப்பா...
நன்றி : https://www.facebook.com/treepage [படம்] 

வியாழன், 7 பிப்ரவரி, 2013

வேதனை : கொலைகாரன் வருகிறான்.. :-(



கொலைகாரன் இந்திய நாட்டிற்கு வருகிறான். அதுவும் நம் நாட்டின் வட எல்லையான வேங்கட 
மலைக்கு பெருமாள் தரிசனம் பெற நம் தாயகம் வருகிறான். என்ன செய்வது கோவமும் ஆத்திரமும் மட்டுமே எஞ்சி நிற்க்கிறது. நான் ஒன்றும் களம் காணும் களப்போராளி அல்லவே. 
முகநூலிலும், வலைப்பூவிலும் வசைபாட மட்டுமே முடிகிறது. எப்போதும் சந்தர்ப்பவாத சாதாரண குடிமகனாகவே இருக்க முடிகிறது.

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா.!
              - பாவேந்தர் பாரதிதாசன்

ரொம்ப அழகா சொல்லிட்டு போயிட்டாரு.. இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படிச்சு பாருங்க.. உணர்ச்சி பொங்கும். ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
-          மகாகவி பாரதியார்

நான், என் வீடு, என் குடும்பம் என மட்டுமே இருக்க பிடிக்கவில்லை. ஆனாலும் அப்படிதான் இருக்க முடிகிறது. இதை ஒருவகையில் கையாலாகாத்தனம் என்றும் சொல்லலாம்.

எத்தகைய அரசியல் பதவிகளிலும் இல்லாத இடத்திலேயே உள்நுழைந்தவனை விரட்டியடிக்க முடிந்தது எம் ஈழத்து உறவுகளால். ஆனால், இங்கோ ஒட்டுமொத்த இந்திய அரசையும் புரட்டிபோடும் அரசியல் வல்லமையும், அறிவும் கொண்ட தலைவர்கள் இருந்தும் இங்கே தட்டுதடுமாறிக்கொண்டிருக்கிறோம்.

தலைவர்களை மட்டும் சொல்லி தவறில்லை. அவர்கள் தவறிழக்கும் போது சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் எப்பொழுதுமே பொய்த்துப்போகின்றன. ஆங்கிலேயன் அதிகமாக அச்சப்பட்டது அப்போதைய நம் ஊடகங்களைப் பார்த்துதான். ஆனால் இப்போதைய ஊடகங்கள் எம்மையே அழிக்கின்றன.

பெரியார் சொல்லியதாக ஒரு விடயம் கேள்விப்பட்டேன், தமிழர்களை அழிக்க தமிழையே ஆயுதமாக கொண்டு வந்தால் அந்த தமிழையும் எதிர்ப்பேன் என்று.

நேரடியாக இருக்கும் எம் எதிரிகள் தமிழ் எனும் ஆயுதம் கொள்ளவில்லை. ஆனால், எம்மினத் துரோகிகள் கொண்டிருக்கிறார்கள் தமிழை ஆயுதமாக. எம்மினத்தை நேரடியாக எதிர்க்க இயலாதவர்கள் எம்மினத்தினுள் துரோகிகளாக எம்முடனே வளர்ந்திருக்கிறார்கள்.
இன்னமும் கூட நம்மினத்தார் பல பேருக்கு நம் வரலாறு சரியாக தெரிவதில்லை. இன்னமும் தாய் தமிழகத்தில் வெகுமக்கள் அறியாமையில்தான் இருக்கிறார்கள். இவ்விருளை அகற்ற போதிய ஒளி கொடுக்க சரியான முன்னெடுப்புகளை எவருமே செய்வதில்லை.

இத்தனை தெரிந்தும் களம் காண இயலாதவனாகவே இருக்கிறேன். அடிமட்ட நடுத்தர வர்க்கத்தில் பிறந்துள்ளதாலேயே குடும்ப சூழ்நிலைகள் என் எண்ணங்கள் அனைத்தும் என்னுள்ளேயே முடக்கிவிடுகின்றன.

எல்லாம் நடந்த இறுதியில் புலம்ப மட்டுமே முடிகிறது. L

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

பரபரப்பு : மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் திடீர் சந்திப்பு

வர வர நம்ம ஆளுங்களுக்கு எத அச்சிடறது, எத அச்சிடக்கூடாதுனே தெரியறதில்லனு நெனைக்கிறேன்.

நேத்து சாயங்காலம் மாலை மலர் செய்திதாளில் ஒரு சேதி படிச்சேன். படிச்சிட்டு எனக்கு என்ன செய்யறதுனே தெரியல. ஒரு நிமிசம் கை காலெல்லாம் வெலவெலத்து போச்சு..

ஒரு வேளை இவங்களுக்கு சேதி எதுவும் கெடக்கலியோ..!!? இப்படியே போச்சுனா வருங்காலத்துல "குவாட்டர்" கோவிந்தன் மூத்திர சந்தில் ஒன்னுக்கு போனார்னு முதல் பக்கத்துல படத்தோட செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல..

அட சேதி ஒன்னுமில்லீங்க.. நேத்து சட்ட சபையில விஜயகாந்த்தும், ஸ்டாலினும் வணக்கம் தெரிவிச்சிகிட்டாங்கலாம்.

இத ஒரு முக்கிய சேதினு கொஞ்சம் அடர் பின்புலத்தில் சேதி வெளியிடுறாங்க.


ஒரு வேளை இந்த பத்திரிக்கையை படிக்கிறவங்களெல்லாம் மாக்கானுங்கனு நெனச்சிருப்பாங்களோ..!!?

இரண்டு பிரபலங்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திக்கும்போது புன்னகை செய்வதோ, வணக்கம் தெரிவிப்பதோ மிக இயல்பான விடயங்களில் ஒன்று.

இது என்னமோ ரொம்ப முக்கியமான் சேதி மாதிரி வெளியிட்டிருக்காங்க செய்தித்தாள் படிக்கிறவன் வேலையில்லாத வெட்டிப்பயனு நெனச்சி..

எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நம்ம நாட்டுல(தமிழ் நாடு) நமக்காக குரல் கொடுக்க ஒரு பத்திரிக்கையும் இல்ல. இந்த மாதிரி வீணா போன வெட்டி சேதி போடுறதுக்கும், நம்மளோட மூளையை மழுங்கடிப்பதற்க்கும்தாம் நிறைய செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.

கொடும கொடுமனு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும கோவனத்த அவுத்து போட்டுட்டு டிங்கி டிங்கி ஆடுச்சாம்.. அந்த கதையா இருக்கு நம்ம ஊடகங்களின் செயல்பாடுகள்...

திங்கள், 4 பிப்ரவரி, 2013

பேரழிவில் : கடலூர் மாவட்டம் - நடு நாடு

சிறப்பு :


இப்போது இருக்கும் நம் தமிழ்நாடு பழங்காலத்தில் எத்தனை நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என ஒரு கேள்வி கேட்டால், நமது பதில் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு, தொண்டை நாடு என வரிசையாக சொல்லுவோம். ஆனால், இந்த வரிசையில் நம்மில் பெரும்பான்மையானோருக்கு தெரியாத ஒரு நாடு, சோழரும் பல்லவரும் பற்ப்பல வெற்றிகளை குவித்து வரலாறு படைக்க உறுதுணையாகவும் காரணியாகவும் வீரத்தின் ஆணி வேராகவும் இருந்த நாடு. பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் என அனைவரும் போட்டி போட்டு அடைய நினைத்த வற்றாத வளம் கொண்ட நாடு. இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் இன்றளவும் போற்றி வளர்த்துவரும் நாடு. தமிழனின் முதல் கலையாம் “தெருக்கூத்தை” இன்றும் நடத்தி வரும் நாடு. ஒவ்வொரு ஆடி மாதமும் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தும்போது இத்திருநாட்டின் எந்த கிராமத்திற்க்கு சென்றாலும் நீங்கள் தெருக்கூத்தை காண இயலும்.

பார்ப்போர் மனதை பறிக்கச் செய்யும் எழிலும் வளமும் கொண்ட நாடு. சமதளத்தில் ஊற்றெடுக்கும் வளம் கொண்ட ஒரே நாடு. கற்பனை பாத்திரமல்லாத உண்மை வள்ளல்களுள் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வள்ளற் கொடையோன் காரி ஆண்ட நாடு. ஐவகை நிலங்களில் பாலை நிலத்தை தவிர்த்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து வகை நிலங்களையும் கொண்ட நாடு. எங்கள் நாடு “நடு நாடு”. இன்றைய பொதுத்தமிழில் உள்ள, கிட்டதட்ட எல்லா வார்த்தைகளுமே எங்கள் நடு நாட்டு தமிழோடு பொருந்திப்போகும். ஒரு உதாரணம் தேங்காயின் மேலோட்டினை பொதுத்தமிழில் “கொட்டான் குச்சி” என்று அழைப்பர். எங்கள் நடு நாட்டுத் தமிழில் அதற்க்குப் பெயர் “கொட்டாஞ்சி”.

நம் தமிழ்நாட்டில், வடக்கில் தென்பெண்ணை ஆற்றையும், தெற்கில் வெள்ளாற்றையும், கிழக்கில் வங்க கடலையும், மேற்கில் கல்வராயன் மலைத்தொடரையும் எல்லைகளாக கொண்ட பகுதி “நடு நாடு” ஆகும்.



தற்போதைய வரைபடத்தில் கடலூர் மாவட்டம் முழுமையும் மற்றும் விழுப்புரம் மாவட்ட்த்தின் சில பகுதிகள் நடுநாட்டின் எல்லைகளுக்குள் அடங்கும்.

பேரிடர்கள்: 

எல்லோருக்கும் பிடித்தமான எங்கள் நடு நாட்டினை இயற்கைக்கும் ரொம்ப பிடிக்கும். அவ்வப்போது தன் பணியாட்களை ஏவி எங்கள் வளங்களில் தனக்கும் பங்கு வேண்டும் என எங்கள் விருப்பத்தை கேட்காமலே தான் விரும்பிய அனைத்தையும் எடுத்துச்சென்றுவிடும்.

இப்பதிவில், இதுவரை நடு நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களை, நான் படித்து தெரிந்துகொண்டவைகளையும் என் நேரடி அனுபவங்களையும் உங்களுடன் பகிர்கிறேன்.

இயற்கையின் ஏவலினால் எங்கள் நடு நாட்டிற்க்கு அடிக்கடி வந்து செல்பவை காற்றின் துணை கொண்டு ஆகாய மார்கமாக புயலும், நீரின் துணைகொண்டு தரை வழியாக வெள்ளமும் தான். எத்தனை முறை எங்கள் வளங்கள் இயற்கையால் கொள்ளையடிக்கப்பட்டாலும் கலங்கியதில்லை கடலூர் மாவட்டம்(நடு நாடு). இயற்கை எங்களை எத்தனை முறை தாக்கியிருக்கிறது எனத்தெறிந்தாலே எங்களின் மீள் எழுச்சி உங்களுக்கு புரியும். இதோ நான் தெரிந்துகொண்டவைகள் உங்களுக்காக.

1681ம் ஆண்டு புயலின் கோரத்தாண்டவம் எங்கள் நடு நாட்டில் நர்த்தனமாடியிருக்கிறது. அடுத்த 65 ஆண்டுகளுக்கு ஏதும் செய்யாத இயற்கை உங்களுக்கு ஓய்வு அதிகமாக கொடுத்துவிட்டேன் என “NOV 1745”ல் மீண்டும் புயலாய் வந்து சேர்த்து வைத்த செல்வங்களை கொள்ளையடித்து கைகொட்டி சிரித்திருக்கிறது. என் நடு நாட்டு மக்கள் இயற்கையை முறைத்துப் பார்த்திருப்பார்கள் போலும், அடுத்த “APRIL 1749”லும் “OCTOBER 1752” லும் வந்து சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் துடைத்து வாரி சென்றிருக்கிறது.

அனைத்தையும் துடைத்து எடுத்து சென்றதாலேயோ என்னவோ அடுத்த 100 ஆண்டுகளுக்கு பெரிதாக எந்த தாக்குதலும் நடந்ததற்க்கான தகவல்கள் இல்லை. மீண்டும், சற்று செல்வ செழிப்போடு வளம்பெற்றுவிட்டார்கள் என்றறிந்த இயற்கை “DECEMBER 1853”ல் அழையா விருந்தாளியாக வந்து எங்களை சுருட்டி வாரி சென்றிருக்கிறது. அடுத்து சிறிதளவு ஓய்வு கொடுத்து 20 வருட இடைவெளியில் 1874 ம் ஆண்டில் சூறாவளி காற்றினால் சுழட்டி அடிக்கப்பட்டுள்ளது எங்கள் நடு நாடு. இதனிடையே 1864ம் ஆண்டு கெடிலம் ஆற்றில் ஏற்ப்பட்ட வெள்ள பெருக்கு. கரையோர கிராமங்களை கரைத்தே எடுத்திருக்கிறது. அடுத்தடுத்து 1884லிலும் 1898லும் பல பகுதிகளை கெடிலம் துணைகொண்டு வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறாள் இயற்கை.

1902 ல் ஒரு புதிய பிரச்சனை, கடலூர் செம்மண்டலம் அருகே தென்பெண்ணையாற்றில் உடைப்பு ஏற்பட்டு நீர் நகருக்குள் புகுந்துள்ளது அதே சமயம் கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு. இதனால் கடலூர் நகரம் மார்பளவு நீரில், வெள்ளக்காட்டில் மூழ்கி தத்தளித்திருந்திருக்கிறது. 1913ல் மீண்டும் வெள்ளப்பெருக்கு. தண்ணீரில் தவித்திருக்கிறது நடு நாடு. கடலூர் நகருக்கு எப்போதும் போல இப்போதும் பெருத்த சேதம்.

அடுத்த 40 ஆண்டு காலம் சீரோடும் சிறப்போடும் செழிப்போடும் இயற்கையின் தொந்தரவு இல்லாமல் அமைதியாகவும் இனிமையாகவும் நகர்ந்துள்ளது. அடுத்த தாக்குதல் ஆரம்பித்தது. 1916ம் ஆண்டு எவரும் எதிர்பார்த்திராத ஒரு பெரும் புயல். இதுவரை எங்கள் வளங்கள் மீது மட்டுமே அதிக ஆசை கொண்டு அழித்தொழித்த இயற்கை, இம்முறை ஏதுமறியா எம்மக்கள் மீது அதீத ஆசை கொண்டு ஆயிரகணக்கானோரை அழைத்துச்சென்று/அடித்துச்சென்று வெற்றுடலை விரவி கிடத்தியது.

1913லும் 1924லும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. செய்வதறியாது தவித்த மக்களை சீர்குலைத்திருக்கிறது இயற்கை. தொடர்ச்சியாக புயலை மட்டுமே அனுப்பினால் மக்களுக்கு அலுப்பு தட்டிவிடும் என்பதாலேயே புயலையும் மழையையும் மாறி மாறி அனுப்பியிருக்கிறாள் இயற்கை அன்னை.

1930ல் மீண்டும் புயல். இம்முறை புயலுடன் பெரு மழையை துணைக்கு அனுப்பியிருந்தாள் இயற்க்கை அன்னை. தொடர்ச்சியாக 36 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. மனித நடமாட்டமே முற்றிலும் முடங்கியது. கடலூர் மாநகரம் வீராணம் ஏரி போல் விசாலமாக காட்சியளித்தது மழையில் தாக்குதலால்.

1931ல் மீண்டும் வெள்ளம். கட்டற்று கரை புரண்டு ஓடியிருக்கிறது.

1933ம் ஆண்டு. இம்முறை இயற்கை அன்னை வேறொன்றை பரிச்சித்து பார்த்திருக்கிறாள். புயலை அனுப்பி கடல் அலைகளை 6 அடி உயரம் வரை மேலெழுப்பி அதை நகரினுல் அனுப்பி சேத விவரம் கணக்கிட்டுள்ளாள். 2004ம் ஆண்டின் ஆழிப் பேரலைக்கு வெள்ளோட்டம் பார்த்திருப்பாள் போலும்.

1937 மற்றும் 1939 ல் மீண்டும் வெள்ளத்தால் மாபெரும் பாதிப்பை சந்தித்தது நடு நாடு. இம்முறையும் கடலூர் நகரம் பெரிதாய் பாதிக்கப்பட்டது.

1941, 1943ம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் புயல் தனது கோரத்தாண்டவத்தை நடு நாட்டில் ஆடியது.

அடுத்தடுத்த தாக்குதல்களை மழைகொண்டு மட்டுமே தாக்க எண்ணிய இயற்கை அன்னை 1946, 1955, 1963, 1966 ஆகிய ஆண்டுகளில் மழையால் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி பெரும் சேதத்தை ஏற்ப்படுத்தினாள். இவ்வெள்ளப்பெருக்கின் போது கடலூர் நகரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இதுவரை நாம் கண்டது நம்மில் முக்கால்வாசி பேர் பிறப்பதற்க்கு முன்னர் நடு நாட்டில் நடந்த இயற்கை பேரிடர்கள். இனி நம் கண்முன்னே நடந்த சிலவற்றை பார்ப்போம்.

“சுனாமி” – ஆழிப்பேரலை :
26-12-2004. 2004ம் ஆண்டு உலகையே உலுக்கி எடுத்த ஒரு பேரழிவு. “சுனாமி” என வெளி நாட்டினரால் பெயர் வைக்கப்பட்ட ஆழிப்பேரலையின் கொடூர தாக்குதல். அதுவரை எவரும் எதிர்பார்த்திராத, புயல், வெள்ளத்தின் போது எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் எம் நடு நாட்டு கடற்கரையோர மக்கள் மீது, இப்போது என்ன செய்வீர்கள் என்ற ஏளன பார்வையுடன் இறுமாப்புடன் இயற்கையால் தொடுக்கப்பட்ட வன்மமான தாக்குதல். 1933ம் ஆண்டு வெள்ளோட்டம் பார்த்ததை வெற்றிகரமாக நடத்திகாட்டினாள் இயற்கை அன்னை.

 


அன்று ஞாயிற்று கிழமை, வழக்கம்போல அதிகாலை 11 மணிவரை உறங்கிவிட்டு வெளியே வந்தேன். சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை. மக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்த எனக்கு பகீரென்று ஆனது. இயற்கை அன்னை கடல் கொண்டு தாண்டவம் ஆடுவதை காட்டிக்கொண்டிருந்தனர்.கடலூரைப் பற்றிய ஒளிப்படங்கள் ஏதும் இல்லை.

புரளி மட்டும் காட்டுத்தீயைவிட வேகமாக பரவிக்கொண்டிருந்த்து. கடல் நீர் குள்ளஞ்சாவடியைத்(ஊர்) தாண்டி வந்து கொண்டிருக்கிறதென்றும், பேருந்துகள் குள்ளஞ்சாவடிக்கு மேல் போகவில்லை என்றும் வெகு வேகமாய் பரவியது புரளி.

எங்க அப்பா தியாகவல்லியில்(ஊர்) இருக்கும் எங்கள் அத்தை வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்பதை தொலைபேசி அழிப்பின் மூலமாக உறுதி செய்துகொண்டிருந்தார். தியாகவல்லி கடல் அருகில் இருக்கும் நெய்தல் நில கிராமங்களில் ஒன்று.

எங்க அப்பா பேரலைத் தாக்குதல் நடந்த மூன்றாம் நாள் எங்கள் பெரியார் கலைக் கல்லூரி இருக்கும் தேவனாம்பட்டினம் பகுதிக்கு சென்று வந்தார். இரண்டு மூன்று சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதாக வந்து சொன்னார். அப்போது நான் அக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். பேரலையால் அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் முடியும் வரை எங்கள் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்திருந்தனர்.



ஆறாவது நாள் நானும், என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை பார்த்துவர சென்றிருந்தோம். கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தேவனாம்பட்டினத்திற்க்கு தனியார், அரசு பேருந்துகள் அனைத்தும் இலவச சேவையை மேற்க்கொண்டிருந்தன. எங்கள் கல்லூரியின் சுற்றுசுவர் முற்றிலுமாக தரைமட்டமாகியிருந்தது. கல்லூரியில் 5.5 அடி தண்ணீர் நின்றிருந்த்தற்க்கான சுவடுக்கள் சுவற்றில் தெரிந்தன. எங்கள் கல்லூரியின் சிற்றுண்டிசாலையின் மாடியில் ஒரு படகு கிடந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதை அப்புறபடுத்தியிருந்தனர். எங்கள் கல்லூரியில் பேரலை நீர்தேக்க அளவு குறிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதை காணலாம்.
என் நண்பன் கிருஷ்ணமூர்த்தி தேவனாம்பட்டினத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தான். அந்த வீட்டு உடைமையாளர் மனைவியும் இப்பேரலையால் இறந்துவிட்டார் என்ற செய்தி மேலும் சோகத்தை அதிகரித்தது.



அப்போது தான் எங்க வெள்ளி கடற்கரையில(Silver Beach) புதுசு புதுசா நிழற்குடை-லாம் கட்ட ஆரம்பிச்சியிருந்தாங்க. 15 அடி உயரம் எழுப்பியிருந்த நிழற்குடை கட்டிடம் மண்ணோடு மண்ணாக கலந்து தரையோடு தரையாக இருந்தது. கடற்கரை நெடுக இருந்த இருக்கைகள் ஒன்றையும் காணவில்லை. கடலோர காவல்படை கட்டிடம் தரைமட்டமாயிருந்தது.

இயற்கையின் இக்கொடூர தாக்குதலால் ஆயிரக்கனக்கானோர் உயிரிழந்து, வீடிழந்து, பொருளிழந்து நின்றது மட்டுமே மிச்சம். ஏனோ இயற்கையின் கோர முகம் எங்களை விட்டு எப்போதும் நீங்குவதாக இல்லை.

மழை :
அடுத்தகட்ட தாக்குதல் மழை உருவில், நவீன யுகத்திலும் என்னை மிஞ்ச எவனும் இல்லை என 2005, 2006ம் ஆண்டுகளில் கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தது மழை. நடுநாடு முழுக்க வெள்ள மயம். கடலூர் மாவட்டத்தில் காணும் இடமெல்லாம் மழையின் பாதிப்பு வெகுவாக இருந்தது.
எங்க ஊருல முட்டிகால் உயரம் தண்ணீர் நின்னா சிதம்பரம் கோயில் கோபுரம் மூழ்கிவிடும் அப்படினு சொல்லுவாங்க. இந்த மழையால சிதம்பரம் முழுக்க ஏரி போலவே காட்சி அளித்தது.

தானே புயல் :
30-12-2011. நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் புயல். சும்மா சுழட்டி சுழட்டி அடிச்சதுல ஊரையே சலவைக்குப் போட்ட மாதிரி சுத்தமா இருந்துச்சி. இந்த புயல் சமயத்துல நான் சென்னைல இருந்தேன். புயல் விட்டதுக்கு அப்புறம் ஊருக்கு வந்து பாத்தா.. மொத்த ஊரும் பளிச்சுனு இருக்கு. கொல்லைல இருக்குற ஒரு மரம் செடி கூட முழுசா இல்ல. முந்திரி மொத்தமும் திருவிகிட்டு கெடக்கு. மாமரம், பலா மரமெல்லாம் மொட்டை மொட்டையா நிக்குது. ஓட்டு வீடு, கூரை வீடெல்லாம் பாதிக்கு மேல காணாம போயிடிச்சு. ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் மொத்தமா அடியோட பாதிக்கப்பட்டுடிச்சு. சீரோடும் சிறப்போடும் சீர்மோவும் பட்டோடும் ஓரளவிற்க்கு செல்வ செழிப்போடும் இருந்த எம் மக்களை தானாகவே வந்து தகர்த்தெரிந்து போய்விட்டாள். புயலுக்கும் பெயரை “தானே” என சூடிவிட்டனர்.



குறிப்பு : இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் சில தகவல்கள் திரு. வீணங்கேணி வி.சண்முகம் அவர்களால் எழுதி அறிவன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட “நெய்வேலி மண்ணும் மக்களும்” எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. மேலும் இப்பதிவில் ஒரு வரி கூட அந்நூலில் இருப்பதை போல இருக்காது. தகவல்கள் மட்டுமே பெறப்பட்டவை.

நன்றி : கூகிள்[படம்]