புதன், 15 அக்டோபர், 2014

சில்லரை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதா கோவை மாநகர போக்குவரத்து கழகம்.!?

கோவை மாகரில் போக்குவரத்துக்கு நான்கு வகையான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. அவை :

1. சாதாரண கட்டண பேருந்து. (நகர பேருந்து - Town Bus)
இவற்றை அடையாளம் காண்பது மிகவும் எளிது. பேருந்து பார்ப்பதற்கு பழைய இரும்புக்கடையில் போட வேண்டிய தகர டப்பா மாதிரியே இருக்கும். தனியார் பேருந்துகள் அனைத்தும் இவ்வகையில்தான் அடங்கும். ஆனால் அரசுப்பேருந்துகளுக்கு எதிராக புத்தம் புதியவைகளாக மின்னிக்கொண்டிருக்கும்.

2. LSS - Limited Stop Service.
இதுவும் தகர டப்பா மாதிரிதான் இருக்கும் ஆனால் சாதாரண கட்டண பேருந்தைவிட தேவலாம் என்று இருக்கும்.  பெயரில் மட்டும்தான் குறைந்த நிறுத்த பேருந்து மற்றபடி அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும். பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் வழி தட எண்ணிற்கு கீழே LSS என எழுதப்பட்டிருக்கும். பொதுவாக LSS என்பது அவ்வளவு எளிதில் எவர் கண்களுக்கும் புலப்படாத மாதிரியே எழுதி இருப்பார்கள், அவ்வளவு நேர்த்தி..

3. Express.
பெயரை படித்தவுடன், இது விரைவாக பயணிக்கக்கூடியது,குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் என்பது மாதிரியான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பில்லை. சாதாரண கட்டண பேருந்து வடிவத்தில் புதிதாக விடப்பட்ட பேருந்துகள்தான் இந்த எக்ஸ்பிரஸ் பேருந்துகள். புதிய பேருந்து என்பதை தவிர்த்து பெரிதாக சொல்வதற்கு ஏதும் இல்லை.

4. தாழ்தள சொகுசு பேருந்து.
இதைப்பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் கட்டண கொள்ளைக்காக விடப்பட்ட பேருந்து. தொடர் பேருந்தும் இவ்வகையை சார்ந்ததே.!
பார்த்த உடன் யாரும் சொல்லாமலே கண்டுகொள்ளலாம். மேலும் பெயர் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும். போக்குவரத்து கழகத்தாரால் விரும்பி அதிகம் இயக்கப்படும் பேருந்து.

கட்டண விவரம் :
ஒரு நிறுத்தத்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்கு வசூலிக்கப்படும் குறைந்தபட்ச கட்டண விவரம் :

சாதாரண பேருந்து   :  ரூ.3
LSS                                 :  ரூ.4
EXPRESS                        :  ரூ.5
சொகுசு பேருந்து      :  ரூ.7
அடுத்தடுத்த கட்டணங்களாக முறையே ரூபாய் 1,1,1 மற்றும் 2 என கூட்டிக்கொள்ளுங்கள்.

பொதுவாக பேருந்துகளில் சில்லரை பிரச்சனை என்பது சில சமயங்களில் ஏற்படக்கூடியதுதான். ஆனால் எப்போதுமே சில்லரை தட்டுப்பாட்டுடன் பிரச்சினையாகவே இருப்பது கோவை மாநகர சாதாரண கட்டண பேருந்துகளில்தான். ஓரளவிற்கு பிரச்சினையாக இருந்த சில்லரைத் தட்டுப்பாடு கடந்த சில வருடங்களாக பெருந்த பிரச்சினையாக இருக்கிறது.

கோவையை பொறுத்தமட்டில் மக்கள் அதிகமாக பயணிக்க விரும்புவது சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும்தான். சம அளவு நேரத்தில் 3 ரூபாயில் பயணிக்ககூடிய இடத்திற்கு ஏன் 7 ரூபாய் கொடுக்க வேண்டும் என தங்கள் பயணத்திற்காக சாதாரண பேருந்துகளையே அதிகம் நாடுகின்றனர்.

கோவையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை அறிமுகப்படுத்திய புதிதில் பல பகுதிகளில் இப்பேருந்துகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில பகுதிகளில் தொடர்ச்சியாக சொகுசு பேருந்துகளை 'பஞ்சர்' செய்யவும் செய்தனர். இதற்கு காரணம் கூடுதலான பேருந்தாக சொகுசு பேருந்துகளை இயக்காமல், சாதாரண பேருந்துகளுக்கு மாற்றாக இயக்கியதுதான்.

மக்களின் தொடர் எதிர்ப்பினை தொடர்ந்து மீண்டும் சாதாரண பேருந்துகளை இயக்கி கூடுதல் பேருந்துகளாக சொகுசு பேருந்துகளை இயக்க தொடங்கியது. ஆயினும் இன்றுவரையிலும், சொகுசு பேருந்துகளில் பயணம் எண்பது மக்களின் விருப்பத்திற்க்குட்பட்ட பயணமாக இல்லை. சாதாரண பேருந்திற்க்கு காத்திருக்க முடியாமல் சொகுசு பேருந்தில் பயணிப்போரே அதிகம்.

சொகுசு பேருந்துகளில் வருமானத்தை அதிகப்படுத்த முடியாமல் அதற்கு ஈடுகட்ட கொண்டுவரப்பட்டதே Express பேருந்துகள்.  LSS பேருந்துகள் இருந்தாலும், சாதாரண மற்றும் LSS பேருந்துகளை அதிகப்படுத்தாமல் புதிதாக விட்ட பேருந்துகளுக்கு Express எனப்பெயரிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

மேலும் சில்லரைப் பிரச்சினையை மையமாகக் கொண்டு சாதாரணப் பேருந்துகளில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கி வைத்துள்ளனர். 4 ரூபாய் பயணச்சீட்டிற்கு 10 ரூபாயை நீட்டியவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிடும் கொடுமையும் அவ்வப்போது ஆங்காங்கே இன்றும் நடந்துவருகிறது.

தினமும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது நடத்துனரிடம் சில்லரைப் பிரச்சினையால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இது ஒவ்வொரு சாதாரணப் பேருந்திலும் நடக்கிறது. சொகுசுப் பேருந்துகளில் அத்தகைய பிரச்சினை ஏற்படுவதில்லை. எப்போதும் மக்கள் கூட்டத்தைக் கிடித்து செல்லும் தனியார் பேருந்து நடத்துநர்கள்கூட மக்களிடம் அப்படி கடிந்துகொள்ளமாட்டார்கள். காலையில் பேருந்தை எடுத்ததிலிருந்து இரவு பேருந்து நிறுத்தும் வரை எப்போதும் சில்லரைப் பிரச்சினை இருந்துகொண்டேயிருக்கும். பையில் சில்லரை இருந்தாலும்கூட முகம் சுளிக்காமல் சில்லரை தரும் நடத்துநரை காண்பது அரிது.

4 ரூபாய் பயணச்சீட்டிற்கு 5 ரூபாய் கொடுத்துவிட்டு மீதி சில்லரை கேட்கமுடியாமல் இறங்கிப்போகும் பயணிகள் எண்ணிக்கை அதிகம் இங்கே.! அதே சமயம் 5 ரூபாய் சீட்டிற்கு 4 ரூபாய் கொடுத்து பயணிப்பவர் எவரும் இலர். ஏனெனில் அத்தகைய சூழல் இல்லை, மக்கள் நாணயமானவர்கள்.

கோவையில் மூன்று முக்கிய பேருந்து நிலையங்கள் இருக்கின்றன. இவ்வளவு சில்லரைத் தட்டுப்பாடு இருக்கும் கோவையில் ஒரு இடத்தில் கூட சில்லரை வழங்கும் இயந்திரத்தைப் பொருத்தவில்லை இந்த நிர்வாகம்.

குறிப்பு: தயவுசெய்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுடன் கோவையை ஒப்பிடாதீர்கள்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தமிழக ஊடகங்களும் அரசியலும் திரைத்துறையும்

நபர் 1 : விஜய T.இராஜேந்தர்
--------------------------------------
தமிழ்நாட்டில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் பிரபலமான ஒரு நபர். திரைத்துறையை சார்ந்தவர் மிகவும் திறமை வாய்ந்த மனிதர். கதை, திரைக்கதை, இசை, வசனம், பாடல்கள், இயக்கம் என பல பரிணாமங்களில் ஜொலித்த ஒரு குட்டி திரைத்துறை பல்கலைக்கழகம் இவர். முன்னணி நாயகர்களின் துணை இல்லாமலேயே பல வெற்றிகளை கொடுத்திருக்கிறார். நாயகனாகவும் களமிறங்கி ஜெயித்துக்காட்டினார். இவருடைய படங்களும் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன. முழுக்க முழுக்க தன் திறமையால் மாபெரும் வளர்ச்சி பெற்ற மாபெரும் மனிதர்.

இப்படி பல திறமைகளை கொண்ட இவர், 2004 ஆண்டு வாக்கில் தான் இருந்த கட்சியிலிருந்து விலகி "அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் அரசியல் கட்சியை நிறுவி நிர்வகித்து வருகிறார். இவருடைய இந்த கட்சி பெரும்பான்மை மக்களை சென்றடையவேயில்லை. இன்று பலரால் பல இடங்களில் கேலி பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நபர் 2 :  கார்த்திக்
-----------------------
இவரும் திரைத்துறை பிரபலம்தான். நடிகர் முத்துராமலிங்கம் அவர்களுடைய மகன். நாயகனாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். 'நவரச நாயகன்' என்ற அடைமொழியோடு எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர். இவரும் அனைவராலும் அறியப்பட்ட, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற மனிதர்தான்.

2006ம் ஆண்டு முதல் ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இருந்த இவர், 2009ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி"  எனும் அரசியல் கட்சியை நிறுவி, நிர்வகித்து வருகிறார். இவரை அறிந்த அளவிற்கு இவருடைய கட்சி அறியப்படவில்லை. இக்கட்சியும் பலரால் கேலி கிண்டல் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.

நபர் 3 : சரத்குமார்
------------------------
தமிழ் திரைத்துறை நாயகர்களில் முக்கியமானவர்களில் இவரும் குறிப்பிட தகுந்தவர். இன்றுவரையிலும் வெற்றிகரமானதொரு கதாநாயகன். பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் என்றால் மிகையாகாது. தமிழக திரைத்துறையில் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்பட்ட இவர் தற்போது புரட்சி நாயகனாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் இரசிகர் மன்றம் அமைக்கப்பட்ட நாயகர்களில் இவரும் ஒருவர்.

ஆகஸ்ட் 31, 2007ம் ஆண்டு "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி" எனும் கட்சியை தொடங்கி முதல் தேர்தலை சந்தித்து கட்சியின் முதல் சமஉ வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  கட்சிக்கு ஒரு சமஉ இருந்தாலும் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. ஏன்! பல பேருக்கு இப்படி ஒரு கட்சி இருப்பதே தெரியாது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

நபர் 4 : விஜயகாந்த்
---------------------------
எங்கள் ஊருக்கு பக்கத்து கிராமமான சேராக்குப்பத்தை சேர்ந்த ஒருவரால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ஒரு காலத்தில் இரஜினிக்கு கடுமையான போட்டியாக விளங்கியவர். இவரும் மேற்சொன்ன மூவரைப் போலவே தமிழகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்டவர் .

அதுவரை எந்த கட்சியிலும் இல்லாத இவர் 2005ம் ஆண்டு "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" எனும் அரசியல் கட்சியை தோற்றுவித்து, இரு சட்டமன்றத் தேர்தலை சந்தித்து, முதல் தேர்தலில் ஒரு சமஉ-ம் இரண்டாவது தேர்தலில் 27 சமஉ-க்களையும் பெற்று தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.

!------------------!

இந்நான்கு பேரையும் அவர்களது அரசியல் வளர்ச்சியையும் உற்றுநோக்கும் போது சில சேதிகளை மிக எளிதாகவே விளங்கிக்கொள்ள முடியும். மூவருமே திரைத்துறையை சார்ந்தவர்கள்தான். நான்கு பேருமே மக்களால் நன்கு அறியப்பட்டவர்கள்தான். ஆனால், முதல் மூன்று நபர்களுக்கு கிடைக்காத அரசியல் வெற்றி விஜயகாந்த்துக்கு மட்டும் எப்படி கிடைத்தது.!?

நால்வருமே தங்களது துறையில் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்தான். ஆனாலும் இவர்களது அரசியல் வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் வேறு சில முரண்பட்ட கூறுகளை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இந்நால்வரில் முதல் மூவரும் தமிழர்கள். அதாவது முதல் மூவருக்கும் தாய்மொழி தமிழாகவும் விஜயகாந்த்துக்கு தாய் மொழி தெலுங்காகவும் இருக்கிறது. தெலுங்கர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும் அவர் சந்தித்த தேர்தல்களின்போது விஜயகாந்த்-க்கும் அவருடைய கட்சிக்கும் ஊடகங்களால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் முன்னுரிமையும் தமிழர்களாகிய T.இராஜேந்தர், கார்த்திக், சரத்குமார் போன்றோர் கட்சி ஆரம்பித்தபோதோ, தேர்தல்களை சந்திக்கும்போதோ வழங்கப்படவில்லை. மாறாக ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டனர்/செய்யப்படுகின்றனர்.

என்னுடைய கேள்வி, இந்த மூன்று தமிழர்களும் விஜயகாந்த்தைவிட எந்த வகையில் தகுதி குறைந்தவர்களாக இருக்கின்றனர்.!? விஜயகாந்த்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏன் இவர்களுக்கு அளிக்கப்படவில்லை.!?

இவற்றை காணும்போது அடிப்படையிலேயே சில கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. ஊடகங்களின் நடுநிலைமை என்பது காணல் நீர்தான். ஆனால், ஐயப்பாடு அடிப்படை நுண் அரசியல் சார்ந்ததாக இருக்கிறது. அதாவது, ஊடகங்கள்/ஊடக பெரு முதலாளிகள் தமிழர் அரசியலில் பெரும்புள்ளியாக வளர்வதை விரும்பவில்லையா..!?

விஜயகாந்த்தின் தகுதி என்னவென்று அறியாமலா அவரை உயர்த்திப்பிடித்தனர். ஆம் என்றால், பிறகு ஏன்
இவர்கள் பத்திரிக்கை நடத்த வேண்டும்!?. அதெப்படி தமிழர் ஒருவர் கட்சி ஆரம்பித்தால், அது சாதிக்கட்சியாகவும், தகுதியற்ற கட்சியாகவும், மக்கள் ஆதரவு பெரிதாக ஒன்றும் இல்லாததைப் போன்றும் எழுதறீங்க..!? அதுவே தமிழரல்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்தால், அவருக்கு ஏகத்துக்கும் முன்னுரிமை கொடுத்து தூக்கி பிடிக்கறீங்க..!!

இது நேற்று இன்றைக்கல்ல பல ஆண்டுகளாகவே தமிழக ஊடகங்கள் இப்படிதான் நடந்துகொள்கின்றன. ஒரே தேர்தலில் ஆட்சியை பிடித்தார் மலையாளி எம்.ஜி.ஆர்.,  தன் கட்சியை கலைத்தார் சிவாஜி. 

தமிழினத்திற்கு எதிரான இந்த ஊடகங்களின் போது அரசியலில் மட்டுமல்ல அனைத்து சேதிகளிலும் பிரதிபலிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஈழ விவகாரத்தில் என்னைப் பொருத்த வரையில் மிகப்பெரிய குற்றவாளி இந்த தமிழக ஊடகங்கள்தான். எங்கோ ஒரு நாட்டிலிருக்கும் தமிழனுக்கு பெரிதாக எந்த தொடர்பும் இல்லாத அல்ஜசீரா, சேனல்4 போன்ற ஊடகங்கள் செய்த வேலையை தமிழக ஊடகங்கள் செய்திருக்க வேண்டும். புரட்சி தீ தமிழகத்தில் பற்றி எரிந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்தது சேதி உணர்ச்சி கொண்ட தமிழனின் உணர்ச்சிகளை மழுங்கடித்தது மட்டுமே.!

தமிழன் உயர் அதிகாரம் பெறுவதை, தமிழக ஊடகங்கள் என சொல்லும் இவர்கள் விரும்புவதே இல்லை. தகுதியில்லாத தமிழரல்லாதவரை உயர்த்திப்பிடிக்கும் இவர்கள் முழுத்தகுதி கொண்ட தமிழர்களை தாழ்த்தவே எண்ணுகின்றனர். தமிழன் எழுச்சிபெறும்போது மட்டுமே இவர்களுக்கு சாதியும், மதமும், இனமும், சமத்துவமும், சமாதானமும், தேசப்பற்றும் மற்றும் பல சங்கதிகளும் பெருகி வரும். இவர்களிடமிருந்து எப்படி விழிப்புறுவது என்பதுதான் தெரியவில்லை.!

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

முற்ப்போக்குச் சிந்தனையின் முதல் படி வன்னியர் புராணம்.


இந்தப் பதிவை பொதுப்புத்தியுடன் கூடிய பார்வை இல்லாமல் சற்று மாற்றி பார்க்குமாறு நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவு சிறு ஒப்பீட்டின் அடிப்படையில் எழுதப்படுகிறது. வருணாசிரமக் கோட்பாட்டிற்க்கும் வன்னியர் புராணத்திற்க்கும் இடையேயான முரண்களின் அடிப்படையில் எழுதப்படுகிறது.

வருணாசிரமத்தின் அடிப்படைக் கோட்பாடான பிறப்பு குறித்த கோட்பாட்டையே அடித்து நொறுக்குகிறது வன்னியர் புராணம்.

வருணாசிரமத்தின் படி மனிதனின் பிறப்பினை நான்காக வகைப்படுத்தி முறையே தலை, தோள், இடை, கால் எனப் பிரித்து பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்கிறது. 

ஆனால், வன்னியர் புராணமோ நெருப்பிலிருந்து பிறந்ததாக கூறுகிறது.

இங்கு நெருப்பிலிருந்து பிறப்பதெல்லாம் எப்படி சாத்தியம் என்பது மாதிரியான பகுத்தறிவு கேள்விகள் வேண்டாம். தலை, தோள், இடை, கால் போன்றவற்றிலிருந்து எப்படி பிறப்பு எனப்படுகிறதோ அதேபோல்தான் நெருப்பும். இங்கு இவர்கள் வருணாசிரம கோட்பாட்டிற்க்குள் வரமாட்டார்கள் என்பதை நிறுவுவதற்கே இது.  

இங்கு இவர்கள் ஏன் நெருப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.? அதாவது உலகிலேயே மிகவும் தூய்மையானது நெருப்புதான். எதனுடனும் கலந்துவிடாது மேலும் அசுத்தத்தையும் சேர்த்து அழித்துவிடும். ஆகவே நாங்கள் தூய்மையானவர்கள் உங்களின் வருணாசிரம கோட்பாடு எங்களுக்கு பொருந்தாது என்பதேயாகும்.

உயர் குலத்திற்க்கும் ஒழுக்கத்திற்கும் குறியீடாக சொல்லப்படுவது பூணூல். வருணாசிரமத்தின் படி பூணூல் தலையில் பிறந்தவர்களுக்கு உரித்தானது. வன்னியர் புராணத்தின் படி பூணூல் வன்னியர்களுக்கு சொந்தமானது. வன்னியர் தோற்றமே தூய்மையின் சின்னமான நெருப்பு என்பதால் தோற்றத்தின்போதே பூணூலோடு வருகிறார். ஆக இவர்கள் உயர் குலத்திலும், ஒழுக்கத்திலும் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பதை நிறுவுகிறது வன்னியர் புராணம்.

ஆக, ஒழுக்கத்திலும் பண்பிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. எமக்கென்று ஒரு உயர் பண்பு இருக்கிறது என்று பறைசாற்றி வருணாசிரமத்திற்க்கு எதிராக இருக்கிறது வன்னியர் புராணம்.

பூணூல் அணியும் நபர்களின் தொழிலாக பிச்சையெடுப்பதை சொல்கிறது வருணாசிரமம். ஆனால், வன்னியர் புராணம் போர் புரிவதற்க்காகவே படைக்கப்பட்டதாகவும் அரச குடியாகவும் சொல்கிறது. அதாவது சத்ரியர்.

யாசித்து வாழ்வது என் குலத்திற்க்கு இழுக்கென தனது தொழில் போர் புரிவது நான் அரச குடியினன் என வருணாசிரமத்தின் தொழில் குறித்த கோட்பாட்டினையும் உடைக்கிறது.

ஆக வருணாசிரமத்திற்க்கு எதிராக அவர்களுடைய போக்கிலேயே நாங்கள் உங்களுடைய கோட்பாட்டிற்க்குள் வரமாட்டோம் என எழுதப்பட்ட ஒரு புராணமாக வன்னியர் புராணம் இருக்கிறது. மேலும் வன்னியர் புராணம் எவரையும் தங்களை விட தாழ்ந்தவர்கள் என கூறவில்லை. அதேசமயம் தாங்களும் யாருக்கும் தாழ்ந்தவ்ர்கள் இல்லை என்றே கூறுகிறது.

வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக எழுதப்பட்டு இந்து புராணங்களாகிய 18 புராணங்களில் 4வது புராணமாக இடம்பெற்றிருப்பது ஆச்சரியம்தான். இயற்றுவதோடல்லாமல் அதனை அனைவரையும் ஏற்க்கும்படி செய்தல் மிகப்பெரிய காரியம். அதைதான் வன்னியர் புராணம் செய்திருக்கிறது.

வருணாசிரமத்தின் அடிப்படையான பிறப்பு, தொழில், உயர் குலம் ஆகியவற்றை வன்னியர் புராணம் அடியோடு தகர்த்திருக்கிறதல்லவா.!!  

என்னுடைய பார்வையில் வன்னியர் புராணம் தெரிவிப்பது இதுதான்: “நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை. நீ எப்படி என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும்.”


ஆகவே, வன்னியர் புராணம் முற்ப்போக்குச் சிந்தனையின் முதல் படி என்கிறேன்.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

மருத்துவம் வியாபாரம்தான் ஆனால் மருத்துவர்கள் வியாபாரிகள் அல்ல.!

இன்றைய காலகட்டத்தில் மருத்துவம் வியாபாரம்தான். ஆனால், மருத்துவர்கள் வியாபாரிகள் அல்ல. சிலர் மட்டும் விதிவிலக்குகளாக.

ஒரு ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு PRINTER வாங்கி அதுல ஒரு BLACK & WHITE PRINT OUT 5 ரூபாய்னு சொல்லுவான். கேட்டா, LASER PRINT-னு சொல்லுவான், QUALITY INK-னு சொல்லுவான். இங்கெல்லாம் நாம பெருசா எதுவும் பேசுறதில்ல.

ஆனால் அதே மாதிரி, இலட்சத்துலயும் கோடியிலயும் பணம் போட்டு வாங்கப்பட்ட மருத்துவ இயந்திரத்தை பயன்படுத்தும் போது குறைந்த அளவு காசுதான் வசூலிக்கனும்னு நாம எதிர்பார்க்கிறோம். இது ஏன்.?

மருத்துவம் சேவைனு சொல்லிட்டு ஏன் இப்படினு கேட்ப்பீங்க.! இப்போதும் மருத்துவம் சேவைதான். எப்படியெனில், ஒரு மூல வியாதிக்காரனுக்கு அறுவை சிகிச்சையை அறுவருப்பு இல்லாம உங்களால் செய்ய முடியுமா..!? இலட்ச ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டீங்க. ஆனால், இந்த மருத்துவர்கள் செய்வாங்க ஏன்னா இது அவங்களோட கடமை. அதனாலதான் இது சேவை.

தலையில் மூளையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைப் பற்றி நம்முடைய பார்வை சாதாரணமானது. ஆனால் ஒரு மருத்துவருக்கு அது சாதாரணமானது அல்ல. உயிர் சம்பந்தப்பட்டது. உயிருக்கு துயர் இல்லாமல் சிகிச்சையை முடிக்கிறாங்க பாத்தீங்களா.! அதனாலதான் சேவை.

உண்மையில் நம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டியது மருத்துவர்களை நோக்கி அல்ல. அரசாங்கத்தை நோக்கி. மருத்துவர் அன்புமணி அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு மருத்துவ துறைக்கு நவீன தொழில் நுட்பங்களை கொண்டுவர 100 கோடி ரூபாயை ஒதுக்கினாராம். ஆனால், அத்தகைய தொழில்நுட்பங்கள் இப்போதைக்கு சரிவராது என அதனை திருப்பி அனுப்பிவிட்டார் அந்நாளைய முதல்வர் கருணாநிதி. இதை ஒரு நேர்காணலின்போது மருத்துவர் அண்புமணி தெரிவித்திருந்தார்.

இதுபோன்றவைகளை குறித்துதான் கேள்வி எழுப்ப வேண்டும் கோபிநாத். செய்வாரா..!? செய்ய முடியுமா..!?

உடல் நல குறைவு காரணமாக மருத்துவரை சந்திக்கும்போது, நமது உபாதைகளை கேட்டறிந்து, இதயத்துடிப்பு, கண், நாக்கு போன்ற வெளிப்படையான கூறுகளை கண்டுணர்ந்து இது இந்த பிரச்சனையாகத்தான் இருக்கும் என்கிற அனுமானத்தின் அடிப்படையில் அதற்க்குறிய அடிப்படை மருந்துகளை எழுதி கொடுப்பார். இரண்டு நாட்களுக்கு இதை சாப்பிடுங்க சரியாகலனா மறுபடியும் வாங்கனு சொல்லுவார். சரியாகிவிட்டால் பிரச்சனை முடிந்தது இல்லையென்றால் அடுத்த கட்ட சோதனைகள்.

கோபிநாத் சொல்வது மாதிரி ஒரே பார்வையில் இது இந்த வியாதிதான் என மருந்து கொடுத்துவிட முடியாது. ஏனெனில் பல வியாதிகளுக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்கும். பிறகு ஏதேனும் பிரச்சனை என்றால் இந்த மருத்துவர்களைதான் நாம் குற்றம் சுமத்திக்கொண்டிருப்போம்.

நாம எல்லோரையும் குறை சொல்லவில்லையே சிலரைத்தானே சொல்கிறோம் என சொல்வீர்கள். உண்மையில் இது ஒட்டு மொத்த மருத்துவர்களின் மீதான பார்வையாகத்தான் அமையுமே தவிர குறிப்பிட்ட சிலர் மீதாக அமையாது. ஏன்? என்றால், யார் அந்த சிலர் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதற்க்கும் ஒரு பொதுப்படையான காரணம் தான் பதிலாக இருக்கும். ஆகவே அனைத்து மருத்துவர்களும் இதற்க்கு எதிராக பேசுவது சரியே.!

சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம், நண்பர் ஒருவர் தன்னுடைய மனைவியின் பிரசவத்திற்க்காக பாண்டிச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றிருந்தார். குழந்தை பிறக்கும் வரை அவர் மருத்துவமனையிலேயே ஒரு ஐந்து நாட்களுக்கு இருந்தார். அந்த ஐந்து நாட்களில் ஆறுக்கும் மேற்ப்பட்ட மரணங்கள் நிகழ்ந்ததாக கூறினார். அவற்றில் இரண்டினை மட்டும் இங்கே சொல்கிறேன்.

1. முதல் பெண்ணிற்க்கு குழந்தை பிறக்கும் தருணம் சுகப்பிரசவத்திற்க்கான முயற்சிகள். குழந்தை பிறந்துவிட்டது. தாய் இறந்துவிட்டார். தாய்க்கு புற்றுநோய். அந்த பெண்ணிற்கு புற்றுநோய் இருந்தது பற்றி யார் ஒருவரும் மருத்துவர்களிடம் வாய் திறந்திருக்கவில்லை.
உடற்கூறு ஆய்வு செய்யலாம் என மருத்துவர்கள் தொடங்கும்போது. உடற்கூறு ஆய்வு வேண்டாம் அவருக்கு ஏற்கனவே புற்றுநோய் இருந்தது என கூறி மருத்துவர்களின் கடுமையான ஆட்சேபனைகளுக்கு இடையே உடலை பெற்று சென்றிருக்கின்றனர்.
இங்கே தவறு யாருடையது.!?

2. இரண்டாவது பெண்ணிற்க்கும் அதேபோல்தான். இது சிசேரியன் என நினைக்கிறேன். குழந்தை பிறந்த பின் தாயை ICU வார்டிற்க்கு மாற்றினர் மருத்துவர்கள். அடுத்த சில நிமிடங்களில் அந்த தாய் துடிதுடித்து இறந்துபோனார். மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்துபோயினர். எதனால் இப்படி ஆனது என குழம்பிபோயிருக்கின்றனர்.
பெண் இறந்தது தெரிந்து பெண் வீட்டார் ஒரே கூச்சல், மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்து கொன்றுவிட்டனர் என ஆர்ப்பாட்டம்.
மருத்துவர்கள் காட்டமாக அந்த பெண்ணின் உறவினர்களிடம் கேட்டது,"உண்மையை சொல்லுங்கள் அந்த பெண்ணிற்க்கு வேறு ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது. அது என்ன?" என வினவியிருக்கின்றனர்.
உடற்கூறு ஆய்வுக்கு முற்படும்போது தடுத்து அவருக்கு "வீசிங்"-னு சொல்றாங்களே அந்த சுவாச கோளாறு இருந்ததை தெரிவித்திருக்கின்றர் உறவினர்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒருவேளை தனியார் மருத்துவமனைகளில் நடந்திருந்தால்..!!?

அந்த நீயா நானா நிகச்சியிலேயே ஒரு மருத்துவர் தெரிவித்திருந்தார், நாளைக்கே ஏதேனும் பிரச்சனையென்றால் நீதிபதி கேட்கிறார் இந்த வியாதிக்கு இந்தந்த சோதனைகள் செய்ய வேண்டுமே செய்தீர்களா என்று..! அனைத்து சோதனைகளையும் செய்ய சொல்வதற்க்கு இதுவும் ஒரு காரணம் என சொல்கிறார். ஆனால் கோபிநாத் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இன்றைய கால சூழ்நிலைகளில் மருத்துவர்கள் தங்கள் பக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மத்தளத்திற்க்கு இரண்டு பக்கம்தான் அடி ஆனால் இவர்களுக்கு எல்லாபக்கமும் இடி. எல்லோரும் அதிகமா பணம் கேக்குறாங்கனா அதுக்கு காரணம் யாரு..!? மருத்துவர்களா..!? இது எப்படி தெரியுங்களா இருக்கு அரசு பள்ளிக்கூடங்கள் ஆயிரம் இருக்க, தனிப்படிப்பு ஆசிரியர் அதிகம் பணம் வசூலிக்கிறார் என சொல்வதைப் போல இருக்கிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு சுகாதார மையம் இருக்கிறது. அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை எத்தனை..!? மருத்துவத்திலேயும் சொகுசு வேணும்னு சொல்றவங்க பணம் அதிகம் கொடுக்கதான் வேணும்.

இதே முகநூலில் ஒரு அண்ணன் சொன்னாரு, வேறு ஒரு இடத்தில் எடுத்துவந்த சோதனை முடிவுகளை ஏற்கமாட்டேனென்று தான் சொல்லும் இடத்தில்தான் எடுக்க வேண்டும் என கண்டித்த மருத்துவரை திட்டிவிட்டு வந்ததாக ஒரு மருத்துவரை குறிப்பிட்டு கூறினார். நிச்சயம் ஆங்காங்கே இம்மாதியான நோயாளி மருத்துவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை மட்டும் கணக்கிட்டால் நல்ல பல மருத்துவர்களை யார் கணக்கிடுவது..!?

ஆனால், இன்னார் என்று குறிப்பிடாமல் ஒரு சிலர் என்று குறிப்பிடுவது மொத்தமான பார்வையாகவே படும்.

                                                                                                        -X-

இத்தனைக்கும் நான் பெரிதாக எந்த மருத்துவமனைக்கும் சென்றதில்லை. எல்லாமே சிறுவயதில்தான். மிதி வண்டி சக்கரத்தில் காலை விட்டு கொண்டது. எங்க ஊரு பள்ளிகூட போர் குட்டையில் குளிக்கும்போது டயர் வண்டியில் இடித்து மண்டையை உடைத்துகொண்டு 4 தையல் போட்டது.

அப்புறம் நாலாவது படிக்கும்போது சின்னதா ஒரு Major Operation.   அதுக்கு அப்புறம் கோவையில் படிக்கும்போது ஒரு நாலு நாள் நல்ல காய்ச்சல். சரியாகிடும்னு பாத்தேன் ஒன்னும் ஆகல. சரினு பக்கத்துல ஒரு மருத்துவர் இருந்தாங்க அவங்ககிட்ட காமிச்சேன். ஊசி போட்டு மருந்துலாம் எழுதிகொடுத்துட்டு, நல்லா சாப்புடுறானு திட்டினாங்க.. மருந்து சீட்டுல Horlicks லாம் எழுதிகொடுத்தாங்கனா பாத்துக்கோங்களேன்..! அவ்ளோதான் நம்ம மருத்துவ தொடர்பு.


இப்பகூட ஒரு நாலு மாசமா மட்டைப் பந்து விளையாடும்போது விழுந்து முட்டியில அடிபட்டு கொஞ்சம் தாங்கிதாங்கி நடக்குறேன். மருத்துவமனைக்கெல்லாம் போகல..